Published : 08 Jan 2025 02:18 AM
Last Updated : 08 Jan 2025 02:18 AM
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திருடுபோனதால், 5,000-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 வாரங்களாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் உள்ளது சோரா கிராமம். இங்கு 5,000 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு 250 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சிலர் இந்த டிரான்ஸ்பார்மரை திருடி, அதன் பாகங்களை எடைக்கு போட, தனித்தனியாக பிரித்து அருகில் உள்ள வயல்களில் இருந்த வைக்கோல் குவியலுக்குள் மறைத்து வைத்தனர்.
இதனால் கிராம மக்கள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். திருடுபோன டிரான்ஸ்பார்மருக்கு மாற்றாக வேறு டிரான்ஸ்பார்மர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராமத் தலைவர் சத்பல் சிங் கூறுகையில், ‘‘ மின்சாரம் இன்றி குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மின்சாரம் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர். மின்சாரம் இல்லாமல் செல்போன்கள் பயன்படுத்த முடியவில்லை. மின் மோட்டார்களை இயக்க முடியாததால் விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் விரைவில் தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
மின்வாரிய செயற் பொறியாளர் நரேந்திர சவுத்திரி கூறுகையில், ‘‘ மின் விநியோக பிரச்சினையை தீர்க்க அருகில் உள்ள கிராமத்தில் இருந்து மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிர் காலங்களில்தான் டிரான்ஸ்பார்மர் திருட்டு நடைபெறுகிறது. அதனால் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இந்த திருட்டு குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘ மின்சாரம் வந்து கொண்டிருந்த கம்பி உட்பட அனைத்தும் திருடப்பட்டுள்ளது. அதனால் இதில் மின் ஊழியருக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. சிசிடிவி கேமிரா பதிவுகள், செல்போன் அழைப்புகளை விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT