Published : 08 Jan 2025 01:20 AM
Last Updated : 08 Jan 2025 01:20 AM

ஒரு நாளைக்கு நான்கைந்து முறை கை கழுவினாலே எந்த நோயும் பாதிக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மற்றும் சேலத்தில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹெச்எம்பிவி எனும் வைரஸ் பரவி வருகிறது என்று சொல்லப்படும் முன்பே, சுகாதாரத் துறையின் உயர் அலுவலர்கள் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். கரோனா பெருந்தொற்று, மன்கிபாக்ஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் அனைத்து பன்னாட்டு விமான நிறுவனங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ஹெச்எம்பிவி வைரஸ் பற்றிய செய்தி அறிந்த உடனேயே கண்காணிப்பில் இருக்கிறோம். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை இதுவரை எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. நாடுமுழுவதும் உள்ள சுகாதாரத் துறை செயலாளர்களின் கூட்டத்தை காணொலி மூலம் மத்திய அரசு நடத்தியது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர், பல்வேறு தகவல்களை சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக, ஹெச்எம்பிவி வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. பதட்டப்படவும் தேவையில்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய வைரஸ் 2001-ல் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்புகள் வந்தால் 3 முதல் 6 நாட்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற சிறியவகை பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பருவமழை தொடங்கும்போது வரும் காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போதும்கூட தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தற்போதும் இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை கை கழுவினாலேயே எந்த நோயும் பாதிக்காது. ஹெச்எம்பிவி வைரஸ் என்பது கரோனா மாதிரியான எவ்வித எந்தவித பாதிப்புகளும் இல்லை. இதற்கென பிரத்யேகமாக எந்தவித சிகிச்சைகளும் இல்லை. எந்தவித சிகிச்சைகளும் எடுத்து கொள்ளாமல் இருந்தாலே தானாகவே சரியாகிவிடும் என்கின்ற நிலையில் இருந்து வருகிறது. அதனால், இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை.

தமிழகத்தில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றால் சேலத்தில் 65 வயதுடைய ஒருவரும், சென்னையில் 45 வயதுடைய ஒருவரும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ளன. இருவரும் நலமுடன் உள்ளனர். காய்ச்சல், இருமல், சளி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் 10, 20 பேர் பரிசோதனை செய்து கொண்டால் யாருக்காவது இந்த வைரஸின் தாக்கம் இருக்கும். இது பதட்டப்படக் கூடிய அளவுக்கு வீரியமிக்க வைரஸ் அல்ல. வீரியம் குறைந்த அளவிலான வைரஸ்தான். நாம் இதுகுறித்து கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் செயலாளர் சுப்ரியா சாஹு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, சிறப்பு செயலாளர் வ.கலையரசி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் மு.விஜயலட்சுமி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பி.உமா மகேஸ்வரி, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (இஎஸ்ஐ) இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x