Last Updated : 08 Jan, 2025 01:10 AM

 

Published : 08 Jan 2025 01:10 AM
Last Updated : 08 Jan 2025 01:10 AM

ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மதுரை நகரமே ஸ்தம்பித்தது - டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி

மதுரை: டங்ஸ்டன் திட்​டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதி கிராம மக்கள், விவசா​யிகள் மதுரைக்கு பேரணி​யாகப் புறப்​பட்டு வந்து, தல்லாகுளம் தபால் அலுவலகம் முன்பு பல்லா​யிரக்​கணக்​கானோர் திரண்டு போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். இதனால், ஜல்லிக்​கட்டு போராட்​டம்​போல் மதுரை நகரம் ஸ்தம்​பித்​தது.

மதுரை மாவட்​டம், மேலூர் அருகே அரிட்​டாபட்டி, அ.வல்​லா​ளபட்டி உள்ளிட்ட சுற்று​வட்டார கிராமங்கள் அடங்கிய பகுதி​யில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்​ததன் பேரில் தனியார் நிறு​வனம் ஏலம் எடுத்​துள்ளது. இதற்கு மேலூர் பகுதி​யில் கடும் எதிர்ப்​பு கிளம்​பியது. திட்​டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், விவசா​யிகள், அரசியல் கட்சி​யினர் தொடர் போராட்​டங்​களில் ஈடுபட்டு வருகின்​றனர்.

இந்நிலை​யில், முல்லை பெரி​யாறு மேலூர் பகுதி ஒருபோகப் பாசன விவசா​யிகள் நலச்​சங்​கம், மேலூர் தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க கூட்​டமைப்பு, பெண்கள் எழுச்சி இயக்​கம், தமிழ்​நாடு விவசா​யிகள் பாது​காப்பு சங்கம், தமிழ்​நாடு உழவர் சங்கம், டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்​டமைப்​பினர் ஒன்றிணைந்து டங்ஸ்டன் திட்​டத்​துக்கு எதிரான பேரணிக்கு அழைப்பு விடுத்​தனர்.

தமிழ்​நாடு தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதையொட்டி மேலூர் நகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதி​களி​லும் ஒட்டுமொத்த வர்த்தக நிறு​வனங்கள் அனைத்​தும் அடைக்​கப்​பட்டன. நேற்று காலை 10 மணி அளவில் மேலூர் தொகுதி முழு​வதிலும் இருந்து விவசாயிகள், விவசாய சங்கத்​தினர், கிராம மக்கள் என பல்லாயிரக்​கணக்கானோர் டிராக்​டர்​கள், வேன்​கள், கார்​கள், டூவீலர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்​களில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யில் சிட்​டம்​பட்டி சுங்​கச்​சாவடி பகுதி​யில் திரண்​டனர்.

சுங்​கச்​சாவடி​யில் இருந்து விவசா​யிகள் சங்க நிர்​வாகிகள் தலைமை​யில் பேரணியாக செல்ல ஆயத்​த​மாகினர். அப்போது மதுரை எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட காவல்​துறை அதிகாரிகள் போராட்​டக்​காரர்​களிடம் பேச்சு​வார்த்தை நடத்​தினர். நடந்து செல்​லாமல், வாகனங்​களில் செல்​லு​மாறு போலீ​ஸார் வைத்த கோரிக்கையை போராட்​டக்​காரர்கள் ஏற்க​வில்லை. காவல்​துறை​யினரின் கட்டுப்​பாட்டை மீறி, தடைகளை அகற்றி​விட்டு விவசா​யிகள், கிராம மக்கள் பேரணியாக மதுரைநோக்கி புறப்​பட்​டனர். ஏராளமான வாகனங்​களும் அணிவகுத்தன.

மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஒத்தக்​கடை, மாட்டுத்​தாவணி, கேகே.நகர் வழியாக தல்லாகுளம் தபால் நிலையப் பகுதி​யை பேரணி அடைந்​தது. அங்கு, டங்ஸ்டன் திட்​டத்தை மத்திய, மாநில அரசுகள் முழு​மையாக ரத்து செய்ய​வில்லை என்றால் இன்னொரு ஜல்லிக்​கட்டு போராட்​டமாக மாறும் என அவர்கள் முழக்​கமிட்​டனர். இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்​தது.

போராட்​டத்​தில் பி.ஆர்​.பாண்​டியன் மற்றும் தமிழ்​நாடு விவசாய சங்கப் பிரதி​நி​திகள் பேசும்​போது, ‘மத்திய அரசு இத்திட்​டத்தை முழு​மையாக ரத்து செய்ய வேண்​டும். தமிழ்​நாடு அரசு தீர்​மானம் நிறைவேற்றினாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடை செய்​ய​வேண்​டும். இத்திட்​டத்​தை தடை செய்​யா​விட்​டால் அடுத்​தகட்ட போராட்​டத்தை முன்னெடுப்​போம்’ என்றனர். தமிழ்​நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்க தலைவர் எஸ்.ரத்​தினவேல் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரி​வித்து பேசினர். விவசா​யிகள், கிராம மக்களின் போராட்​டத்​தால் ஜல்லிக்​கட்டு போராட்டம் போல் மதுரை நகரமே ஸ்தம்​பித்​தது.

இந்த போராட்​டத்​தால் மதுரை - திருச்சி நான்கு வழிச்​சாலை​யில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்கு​வரத்து பாதித்​தது. பிரதான சாலைகள் வழியாக பேரணி சென்​ற​தால் வழிநெடு​கிலும் போலீ​ஸார் நிறுத்​தப்​பட்​டிருந்​தனர். மதுரை ​மாநகர் ​முழு​வதும் ​போக்கு​வரத்து பா​தித்​தது. தென்​மண்டல ஐஜி பிரேம்​ஆனந்த் சின்கா, ​மாநகர ​காவல் ஆணை​யர் லோகநாதன், எஸ்பி அர​விந்த் தலை​மை​யில் ஏராளமான ​போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x