Published : 07 Jan 2025 07:24 PM
Last Updated : 07 Jan 2025 07:24 PM
கோவை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்துகொண்டு இருப்பதை மறைப்பதற்காக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''தமிழகத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை. திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி. தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என மத்திய அரசு கூறிவிட்டது. தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும். திமுக ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என கூறுகின்றனர்.
தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால் அதை பிரிவினைவாதம் என்று புதிய அர்த்தத்தை தமிழக அரசால் தான் கற்பிக்க முடியும். வேங்கை வயல் பிரச்சனையை திமுக அரசு தீர்த்து வைத்ததா? ஆண்ட பரம்பரை என திமுக அமைச்சர் ஒருவரே ஜாதி பாகுபாடுகளோடு பேசுகிறார். அதை கண்டிக்காதது முதலமைச்சரின் தவறு. ஆளுநர் தேசிய கீதத்திற்காக ஒரு கோரிக்கை வைத்தார் அதை நிராகரித்து விட்டு அவருக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்து கொண்டு இருப்பதை மறைப்பதற்காக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு தமிழக அரசு நிச்சயம் பதில் கூற வேண்டும். தமிழ்நாட்டில் யார் அந்த சார் என்று கேட்கும் போது, தமிழகத்தில் யார் அந்த பாட்டி என்றும் தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
பொங்கல் தொகுப்பில் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. முதல்வர் வரம்பு மீறி ஆளுநர் குறித்து ஒரு ட்வீட் போடுகிறார். ஆனால் அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏன் இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே விசாரணை நடக்கும் நிலையில் ஏன் போராட வேண்டும் என சகோதரி கனிமொழி கேட்கிறார்.
தேசிய கீதம் தொடர்பாக ஆளுநர் நேற்றே பதில் அளித்து விட்ட நிலையில் திமுகவினர் ஏன் போராட வேண்டும். தமிழக அரசு தவறான வழியில் செல்கிறது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் பெரும் சான்று. கருப்புத் துப்பட்டா அணிந்தால் என்ன. ஆளுநரை பார்த்தால் பயம், மக்களைப் பார்த்தால் பயம், எதிர்க்கட்சிகளை பார்த்தால் பயம், பெண்கள் அணியும் கருப்பு துப்பட்டாவை பார்த்தால் பயம் என்றால் தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது. காவியை பார்த்து முதலில் அச்சப்பட்டனர். தற்போது கருப்பு நிறத்தை பார்த்து ஏன் அச்சப்பட வேண்டும்.
நான் புதுச்சேரியில் ஆளுநராக இருந்தபோது கூட தேசிய கீதம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்பு தான் உரையை தொடங்குவோம். தேசிய கீதத்தை வைத்து திமுகவினர் இவ்வளவு பெரிய அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் எல்லா குரல்களையும். திமுக கூட்டணியில் உள்ளவர்களே தமிழக அரசுக்கு எதிராக பேசுகின்றனர்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT