Published : 07 Jan 2025 06:14 PM
Last Updated : 07 Jan 2025 06:14 PM
சென்னை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.
மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது திமுக. உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "திமுக ஆட்சியில், எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால் ஆளுநரையும் எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு திமுக பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, காவல்துறை, சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT