Published : 07 Jan 2025 03:50 PM
Last Updated : 07 Jan 2025 03:50 PM

துணைவேந்தர்கள் நியமனத்தில் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடி தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் சாடல்

முதல்வர் ஸ்டாலின் | படம்: எம்.ஸ்ரீநாத்

சென்னை: “துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யுஜிசி வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். மத்திய பாஜக அரசின் இந்த எதேச்சதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது. தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழகம் நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது.

அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யுஜிசி வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும். இந்த வரம்புமீறிய செயலை ஏற்கமுடியாது. இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழகம் முன்னெடுக்கும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x