Published : 06 Jan 2025 04:34 PM
Last Updated : 06 Jan 2025 04:34 PM
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், காலதாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர். இதனையடுத்து, ‘சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
‘கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?’ என கேள்வி எழுப்பினர். ‘மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை’ என தெரிவித்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக நீதிபதிகள் கூறினர். மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்வதாகவும் அவ்வாறு தவறிழிக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை எனவும், மாதவரத்தில் இருந்து வந்ததாகவும், இதற்கு கல்வராயன் மலைக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என கூறினார். 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினார்.
இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT