Published : 04 Jan 2025 03:17 PM
Last Updated : 04 Jan 2025 03:17 PM
தமிழை வளர்க்க வேண்டிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அரங்கேறி வரும் அதிரடி நிகழ்வுகள் தமிழறிஞர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி வருகின்றன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2017-2018 காலகட்டத்தில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள் என 40 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் உரிய தகுதியின்றி நியமனம் செய்யப்பட்டதாக பேராசிரியர்கள் சிலர் அப்போதே போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக வழக்கும் தாக்கலாகி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரைக்கும் விவகாரம் நீண்டது.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே அந்த 40 பேரையும் அண்மையில் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டார் துணைவேந்தர் திருவள்ளுவன். இது பெரும் சர்ச்சையாகி, ஆளுநர் மாளிகை விசாரணை வரைக்கும் போனது. இறுதியில், பணி ஓய்வுக்கு 22 நாட்கள் இருந்த நிலையில் திருவள்ளுவனை கடந்த மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் ஆளுநர். அத்துடன், பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக் குழுவையும் அமைத்தார் ஆளுநர்.
இந்த நிலையில், பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியரான க.சங்கர் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இது முறைகேடாக பணி நியமனம் பெற்றதாகச் சொல்லப்படும் 40 பேருக்கும் அச்சத்தை உண்டாக்கியது. இந்த 40 பேரில் பதிவாளர் பொறுப்பு வகித்த சி.தியாகராஜனும் ஒருவர். இந்த நிலையில், கடந்த வாரம் தியாகராஜனிடம், 40 பேர் நியமனம் தொடர்பான கோப்புகளை சங்கர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் தராமல் இழுத்தடித்துள்ளார். இதையடுத்து அவரை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கினார் சங்கர். ஆனால், அதை ஏற்க மறுத்த தியாகராஜன், சங்கரை துணைவேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக தடாலடியாக அறிவித்தார்.
பதிவாளர் எப்படி துணைவேந்தரை நீக்கமுடியும் என பல்கலைக் கழகத்தில் உள்ள அத்தனை பேருமே குழம்பிப் போனார்கள். இதனிடையே, வெற்றிச்செல்வன் என்பவரை புதிய பதிவாளராக நியமித்தார் சங்கர். ஆனால், அவரை பொறுப்பேற்க விடாமல் பதிவாளர் அறையை பூட்டிவைத்துக் கொண்டார் தியாகராஜன்.
அதற்காக சளைக்காத வெற்றிச்செல்வன், 30-ம் தேதி போலீஸ் உதவியுடன் பூட்டை உடைத்து அறையைத் திறந்து பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று மாலையே, “தியாகராஜன் பணியில் இருந்தால் 40 பேர் பணி நியமன விவகாரத்தில் விசாரணை முறையாக நடைபெறாது என்பதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என அறிவித்தார் சங்கர்.
இப்படி அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறி வரும் நிலையில் பொறுப்பு துணைவேந்தர் சங்கரிடம் பேசினோம். “பதிவாளர் பொறுப்பிலிருந்த தியாகராஜன் தனது கடமையையும், தனது உயரதிகாரிகளின் சட்டபூர்வமான உத்தரவுகளையும் நிறைவேற்ற மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார். தன்னுடன் 2017-2018-ம் ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்குச் சாதகமாகவும் செயல்பட்டு வந்தார்.
நிர்வாகவியல் அதிகாரப் படிநிலைக் கோட்பாடுகளை மீறி தனது உயரதிகாரியை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் இத்தகைய நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழகத்தின் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது துணைவேந்தரின் கடமை என்பதால், தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்” என்றார் அவர்.
இதுதொடர்பாக பல்கலைக் கழக பணியாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் சிலர் நம்மிடம், “எந்த நோக்கத்துக்காக இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் தடம் மாறி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது வேதனை அளிக்கிறது.
துணை வேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுமே பல்கலைக் கழகத்தை வழி நடத்த மூவர் கமிட்டியை அரசு அமைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டதால் நடக்கக்கூடாத விஷயங்கள் எல்லாம் நடக்கிறது.
பல்கலைக்கழகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டவுடன் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு கண்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை” என்றனர். ஜனவரி 8-ம் தேதி, ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தனது விசாரணையை தொடங்க உள்ளார். அதற்குள்ளாக மேலும் பிரச்சினைகள் வெடித்துவிடாமல் இருக்க வேண்டுமே என்பதே தமிழறிஞர்களின் கவலையாக உள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT