Published : 01 Jan 2025 07:53 PM
Last Updated : 01 Jan 2025 07:53 PM
சென்னை: “நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை - எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆங்கில புத்தாண்டில் புதிய எழுச்சியுடன் மதிமுக தன்னுடைய கட்சி பணிகளை தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் மண்டல வாரியாக கட்சி கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் மோசமான திட்டமாகும். இது சாத்தியமற்றது. இத்திட்டத்தால் குழப்பம் தான் ஏற்படும். கூடங்குளத்தில் இன்னும் 2 அணு உலைகளைக் கொண்டு வருவோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்படி கொண்டுவந்தால் அது பெரிய ஆபத்தாகிவிடும்.
வரும் காலத்தில் பிரதமர் மோடிக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது. தமிழகத்தை பாஜக குறிவைத்து தாக்குகிறது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறும். கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எந்த விரிசலும் இல்லை. கூட்டணியை மேலும் வலுப்படுத்தி வெற்றி பெறச் செய்வோம்.
விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்.
இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. மம்தா பானர்ஜிக்கு இல்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. அந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT