Published : 30 Dec 2024 03:07 PM
Last Updated : 30 Dec 2024 03:07 PM
தமிழகத்தின் அடுத்த முதல்வர், அதிமுக-வின் அடுத்த பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தான் என்கிற நிலை 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிலவியது. அப்போது பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அதிகாரமெல்லாம் டிடிவி-யிடம் தான் இருந்தது.
முதல்வராகும் கனவோடு தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தினகரன் போட்டியிட்டார். அப்போதே தேர்தல் நடந்திருந்தால் தினகரன் நினைத்தது கைகூடி இருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சசிகலாவையும் தினகரனையும் கட்சியைவிட்டு நீக்குமளவுக்கு துளிர்விட்டார் பழனிசாமி. இதன் பிறகு வந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார் தினகரன்.
அதைத் தொடர்ந்து, அதிமுக-வை துரோகிகளிடமிருந்து மீட்போம் எனச் சொல்லி வந்த தினகரன், அதுவரைக்குமான தற்காலிக ஏற்பாடாக அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அப்போது சிறையில் இருந்த சசிகலா, அமமுக-வுக்கு ஆதரவும் தரவில்லை எதிர்ப்பும் காட்டவில்லை என்பது வேறு விஷயம். இந்த நிலையில், 2019 மக்களவை தேர்தல் தொடங்கி அடுத்து வந்த அத்தனை தேர்தல்களிலும் படுதோல்வி கண்டது அமமுக.
இதனால் தேர்தலுக்குத் தேர்தல் அமமுக கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. இதைப் புரிந்து கொண்டு திடீரென கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ்-சுடன் கைகோத்தார் டிடிவி. இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்பார்கள் என்று பேசப்பட்ட நிலையில், “கட்சியை அதிமுக-வுடன் இணைக்கும் திட்டமில்லை” என அறிவித்தார் டிடிவி. இது அவரிடம் மிச்சம் சொச்சமிருந்த ஜெ. விசுவாசிகளையும் சிந்திக்க வைத்தது.
தினகரனின் தெளிவற்ற அரசியல் பயணத்தால் திக்குத் தெரியாமல் நிற்கும் அமமுக தொண்டர்கள், “எப்படியும் அதிமுக-வை மீட்டு வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் தான் தினகரன் தலைமையை ஏற்றோம். ஆனால், தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தனி கட்சி தொடங்கிய அவர், கடந்த தேர்தலில் பாஜக-வுடன் கைகோக்கும் நிலைக்கு தடுமாறிவிட்டார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மை மக்களும் இப்போது அவரைக் கைவிட்டுவிட்டார்கள்.
அதைச் சரிக்கட்ட, தென் மாவட்டங்களில் தேவரினத்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் அவர் முழுமையாக ஈடுபட்டதாக தெரியவில்லை. அதனால் தான் தென்மாவட்ட அமமுக-வினரும் அதிமுக-வுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கள நிலவரம் என்னவென்று சரியாக தெரிந்துகொள்ளாமல் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தால் கட்சி வளர்ந்துவிடும் என நினைக்கிறார் தினகரன்.
ஆர்.கே.நகரில் தினகரன் வென்றபோது அவருக்கு துணையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் 18 பேர் இருந்தனர். செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் அதில் முக்கியமானவர்கள். ஆனால், தனது செயல்பாடுகளால் அவர்களையும் இழந்துவிட்டார் தினகரன். இனியும் இப்படியே போனால் கட்சியில் அவர் மட்டும் தான் மிச்சம் இருப்பார். இதைப் புரிந்துகொண்டு அவர் எதார்த்த அரசியலுக்கு திரும்ப வேண்டும் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடி கட்சியைக் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்கள்.
அமமுக மூத்த நிர்வாகிகளோ, “தினகரனை வைத்து ஆதாயம் பார்க்கலாம் என நினைத்தவர்கள் எல்லாம் 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே விலகி ஓடிவிட்டனர். இப்போது அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாமே உண்மையான விசுவாசிகள். அதேபோல், இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் அமமுக-வுக்கு சாதகமாக இல்லாமல் போயிருக்கலாம்.
ஆனால், 2026 தேர்தலில் பாமக துணையுடன் வட மாவட்டங்களிலும் பாஜக துணையுடன் தென் மாவட்டங்களிலும் அமமுக கணிசமான தொகுதிகளை கைப்பற்றும். அதற்கான வியூகங்களை டிடிவி வகுப்பார்” என்கிறார்கள். ஆடிக் காற்றடிக்கும் தமிழக அரசியலில் அம்மிகளே அதிரலாம் போல் இருக்கையில் அமமுக என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT