Published : 30 Dec 2024 12:26 AM
Last Updated : 30 Dec 2024 12:26 AM

தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். உடன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் தொழில்களை பெருக்கும் நோக்குடன் முதல்முறையாக கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சென்னையில் மிகப் பெரிய டைடல் பூங்கா திறக்கப்பட்டது. தொடர்ந்து, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், தூத்துக்குடியில் டைடல் நியோ என்ற மினி டைடல் பூங்கா ரூ.32.50 கோடி செலவில், 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 4 தளங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாகன நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், தடையற்ற மின்வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேற்று மாலை தூத்துக்குடி மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார். மேலும், இங்கு அமையவுள்ள 2 நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். இந்த டைடல் பூங்கா மூலம் 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலர் அருண்ராய், சிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று, மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான விழா தூத்துக்குடியில் இன்று (டிச.30) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைக்கிறார்.

வள்ளுவர் சிலை வெள்ளி விழா: கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை 2000 ஜனவரி 1-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இன்று வெள்ளி விழா கொண்டாட்டம் தொடங்குகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கன்னியாகுமரி வந்து, கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலையைப் பார்வையிடுகிறார். பின்னர், அங்கு வள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு நடைபாலத்தை திறந்து வைக்கிறார். இரவு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், நாளை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x