Published : 29 Dec 2024 04:24 AM
Last Updated : 29 Dec 2024 04:24 AM
பெரிய கட்சிகளை மட்டுமின்றி எல்லா கட்சிகளையுமே குடும்ப வாரிசு அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. அவ்வப்போது நடக்கும் குடும்பச் சண்டைகள் மூலம் அதன் விபரீத முகத்தையும் காட்டி வருகிறது. அந்த வரிசையில் பாமகவில் அப்பா, மகன் இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையிலேயே பெரிய அளவில் வெடித்திருக்கிறது.
அதிகாரத்தை நிலைநாட்ட முயன்ற அப்பா ராமதாஸுக்கும், அதை ஏற்க மறுத்த மகன் அன்புமணிக்கும் சிறப்பு பொதுக்குழு மேடையிலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டுவிட்டது. குடும்பத்தில் வேறொருவரை நிர்வாகியாக நியமிக்கும் அறிவிப்பை ஆணித்தரமாக வெளியிட்டதோடு, அன்புமணியை மேடையில் நேரடியாகவே எச்சரித்தார் ராமதாஸ்.
வன்னியர் சமூக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் வன்னியர் சங்கத்தை தீவிரமாக செயல்படுத்தி வந்த ராமதாஸ், அதிகாரத்துக்கு வந்தால் தான் எல்லாம் செய்ய முடியும் என உணர்ந்து, அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்தார். அதன்படி, சென்னையில் 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) என்கிற அரசியல் கட்சியை ராமதாஸ் தொடங்கினார். கட்சி தொடங்கிய போதே, எனது குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்கு வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி நடந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்றார் ராமதாஸ்.
வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்ட பாமக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றிகளை பெற தொடங்கியது. இதனால், கட்சியும் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக பாமக உருவெடுத்தது. கட்சியின் வளர்ச்சியில் வன்னியர் சங்கத்திலும், கட்சியிலும் பணியாற்றி வந்த காடுவெட்டி ஜெ.குருவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
எனது குடும்பத்தில் இருந்து கட்சிக்குள் யாரும் வரமாட்டார்கள் என்று தெரிவித்திருந்த ராமதாஸ், தனது மகன் அன்புமணியை கட்சிக்குள் கொண்டு வந்து பொறுப்பு வழங்கியதும், போட்டியிட செய்ததும், மத்திய அமைச்சராக்கியதும் விமர்சனத்துக்குள்ளானது.
வயது முதிர்வு காரணமாக கட்சியில் ராமதாஸின் செயல்பாடு குறைய தொடங்கியதால், இரண்டாம் இடத்தில் இருந்த அன்புமணி முதலிடத்துக்கு வந்தார். கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அன்புமணி கையே மேலோங்கியது.
கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணிக்கு கட்சி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி தலைவரானதும் கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் அன்புமணி.
ராமதாஸிடம் கலந்தாலோசிக்காமல் சிலமுடிவுகளை அன்புமணி எடுக்க தொடங்கினார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது. கட்சி தனது கட்டுப்பாட்டை விட்டு செல்வதை தெரிந்து கொண்ட ராமதாஸ், மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்.
அதன்படி, முதல் நடவடிக்கையாக அன்புமணி வகித்த இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனுக்கு வழங்கினார்.
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அவர், கட்சியில் எந்த விதத்திலும் ஆக்டிவாக இருந்ததில்லை. அவருக்கு எப்படி கட்சியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் தான் வகித்த பொறுப்பை வழங்கலாம் என்று ராமதாஸிடம் அன்புமணி கேள்விகளை எழுப்பியாதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அதேநேரம் ஜி.கே.மணியின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு கட்சியினரிடமும் எதிர்ப்பு வலுக்க தொடங்கியது. இதையடுத்து, இளைஞர் அணி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். இந்த சம்பவம் ராமதாஸின் கோபத்தை மேலும் அதிகரித்தது. கட்சியில் மகனுக்கு பொறுப்பு வழங்கியதை அன்புமணியே எதிர்ப்பதை நினைத்து ஜி.கே.மணியும் வருத்தமடைந்தார்.
எப்படியாவது கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த ராமதாஸ், தனது வயது, உடல்நிலையை பொருட்படுத்தாமல் தீவிர கட்சி பணியில் ஈடுபட தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இருவரும் தனித்தனியாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டணி விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இறுதியில் அன்புமணியே வெற்றி பெற்றார். அவரது விருப்பப்படியே பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது.
அந்த தேர்தலில் தருமபுரி தொகுதியில் தனது மனைவி சவுமியாவை வேட்பாளராக அன்புமணி நிறுத்தியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. முதலில் மகன் அன்புமணி, இப்போது மருமகள் சவுமியா வந்துள்ளார் என்றும், ராமதாஸ் சொன்னது என்ன ஆனது எனவும் பலர் விமர்சனம் செய்தனர். அந்த தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தது. இதனால், ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து, இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் குறைந்ததாக கூறப்படுகிறது.
ஜி.கே.மணி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியதிலும், கூட்டணி பேச்சுவார்த்தையிலும் பின்னடைவை சந்தித்த ராமதாஸ், கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பாக, டிசம்பர் 28-ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், கட்சியின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ராமதாஸின் வலது புறம் அன்புமணியும், இடது புறம் ஜி.கே.மணியும் அமர்ந்திருந்தனர். கூட்டத்தில் ராமதாஸ் திட்டமிட்டபடி, ஜி.கே.மணி மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ராஜினாமா செய்ததில் இருந்து காலியாக இருக்கும் கட்சியின் இளைஞர் அணி தலைவர்பொறுப்பில், தனது மூத்த மகள் காந்திமதியின் மகனும், பேரனுமாகிய முகுந்தன் என்பவரை நியமிக்கிறேன். அவர் இன்று முதல் அந்த பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு உதவியாக இருப்பார் என்று அறிவித்தார்.
இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, அவர் 4 மாதத்துக்கு முன்புதான் கட்சிக்கு வந்துள்ளார். அவருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி என்றால், அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிக்க வேண்டும் என்றார். அதற்கு ராமதாஸ், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இது நான் உண்டாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் கட்சியில் இருக்க முடியாது. நான் மீண்டும் சொல்கிறேன். கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார் என்றார்.
அப்போது அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொன்னா. என்ன சொல்றது” என்று கூறிவிட்டு கையில் இருந்த மைக்கை தூக்கிப் போட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, “சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்கலாம். 4446060628 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
இதையடுத்து ராமதாஸ், “இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான். அவர் உனக்கு உதவியாக இருக்க போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால் அவ்வளவு தான். வேறு என்ன சொல்வது. முகுந்தன் தலைவர். நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் தொடங்கிய கட்சி. நான் சொல்வதை தான் செய்யனும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்ளுங்கள். யாராக இருந்தாலும். விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சை கேட்காதவர்கள் விலகி கொள்ளலாம்” என்றார்.
கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ராமதாஸ், பொதுக்குழு மேடையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியே தெரியாமல் நடந்து வந்த இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு, வாக்குவாதங்கள், தற்போது பொதுக்குழு கூட்ட மேடையில் வெளிப்படையாக அரங்கேறியதுடன், இருவரும் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட சம்பவம் கூட்டத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்தது. தந்தைக்கும், மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT