Published : 29 Dec 2024 02:14 AM
Last Updated : 29 Dec 2024 02:14 AM

மன்மோகன் சிங்கின் சேவையை அவமதிக்கிறது பாஜக அரசு: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

நினைவகம் கட்டும் இடத்தில், இறுதிச்சடங்கை நடத்த கோரியதை பாஜக அரசு நிராகரித்தது, மன்மோகன் சிங்கின் உயர்ந்த தொண்டை நேரடியாகவே அவமதிக்கும் செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தார் அவருக்கு நினைவகம் கட்டுவதற்குரிய இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதை பாஜக அரசு நிராகரித்துள்ளது. இது அவரது உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும்.

அவரது குடும்பத்தார் வைத்த கோரிக்கையை மறுத்து, இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதிச் சடங்கு நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது, மத்திய பாஜக அரசின் ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. இது அவரது பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சியாகும்.

மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது. இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். பெருந்தலைவர்களை அவமதிக்கும் கறை வரலாற்றில் இருந்து என்றும் மறையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x