Published : 28 Dec 2024 03:50 PM
Last Updated : 28 Dec 2024 03:50 PM

‘அந்த எளிமை சரவணங்கிட்ட இப்ப இல்லைங்க..!’ - காங்கிரஸ் மேயரை கரித்துக்கொட்டும் கதர் பார்ட்டிகள்

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக ஆட்டோ டிரைவரான சரவணனை அமர்த்தி அழகுபார்த்தது காங்கிரஸ் கட்சி. அதை பணிவுடன் ஏற்றுக்கொண்ட சரவணன், ஆட்டோவிலேயே வந்து மேயராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால், “அந்த பணிவும், எளிமையும் சரவணங்கிட்ட இப்ப இல்லைங்க. அவர் எங்கேயோ போய்ட்டார். பதவியும் பணமும் ஆளையே மாத்திருச்சு” என்று காங்கிரஸ்காரர்களே இப்போது புலம்புகிறார்கள்.

கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரசுக்கு இரண்டே இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் தான். ஆனாலும் கூட்டணி ஒதுக்கீட்டில் கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தது திமுக. இதையடுத்து, தனக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று நினைத்து ஆட்டோ டிரைவரான சரவணனை மேயர் பதவிக்கு கைகாட்டினார் காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன். ஆனால், லோகநாதனுக்கே இப்போது சரவணன் பெப்பே காட்டிவிட்டதாக கதர்பார்ட்டிகள் கதறுகிறார்கள்.

இதனால், சரவணன் ஒரு பக்கமும் லோகநாதன் ஒரு பக்கமும் கட்சிக் கூட்டங்களை நடத்தி பலம்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக இரண்டு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் தலைமைக்கு புகார்களை தட்டிவிட்டதாகவும் சொல்கிறார்கள். தலைமை இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தாலும் புகைச்சல் அடங்கவில்லை.

கூட்டணி கட்சியான திமுக-வும் சரவணனுடன் இணக்கமாக இல்லை. இதனால், மாநகராட்சி நிர்வாகத்தில் திட்டப் பணிகளை ஆய்வு செய்வது, திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது என திமுக-வினர் தனி ஆவர்த்தனம் செய்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் ‘பஞ்சாயத்து’ பேசப்பட்டு பிரச்சினை ‘சுமுகமாக’ முடிக்கப்பட்டது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது கூட்டணி மோதல்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கும்பகோணம் காங்கிரஸ் நிர்வாகிகள், “தான் சொன்னதைக் கேட்பார் என்று தான் சரவணனை மேயர் பதவிக்கு சிபாரிசு செய்தார் மாவட்ட தலைவர் லோகநாதன். சரவணனும் தொடக்கத்தில் அடக்கமாகத்தான் இருந்தார். ஆனால், போகப் போக அனைத்திலும் தனக்கும் ‘முக்கியத்துவம்’ வேண்டும் என நினைத்தார் லோகநாதன். அதில் தான் சிக்கலாகிவிட்டது. இதனால், மெல்ல மெல்ல லோகநாதனைவிட்டு விலக ஆரம்பித்துவிட்டார் சரவணன்.

மேயராவதற்கு முன்பு, ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த சரவணன் இப்போது, பைனான்ஸ், சீட்டு தொழில் என லட்சாதிபதி ஆகிவிட்டார். தனக்கு இன்னொரு வாய்ப்பு இப்படி கிடைக்காது என்பதால் முடிந்தவரைக்கும் தன்னை வளப்படுத்தி வருகிறார். அதேசமயம் தனது வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ்காரர்களை அவர் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை” என்றனர்.

இது குறித்தெல்லாம் மேயர் சரவணனிடம் கேட்டபோது, “கட்சி எனக்கு அளித்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறம்பட செயல்பட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்துள்ளேன். அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் வாய்ப்புக் கேட்பதாக இருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியினருக்கு என்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய்துவருகிறேன். இந்தத் தீபாவளிக்குக்கூட கட்சி நிர்வாகிகள் 100 பேருக்கு உடைகள், இனிப்புகளை வழங்கினேன். ஆக, எப்போதுமே நான் கட்சியினருடன் இணக்கமாகத்தான் உள்ளேன். மேயரானாலும் இன்னமும் நான் ஆட்டோ டிரைவர் தான். இப்போதும் என்னிடம் ஆட்டோ உள்ளது. அதை வாடகைக்கு விட்டு வருகிறேன். சில நேரங்களில் நானும் ஓட்டுகிறேன்” என்றார். சரவணன் சிவனேன்னு ஆட்டோவே ஓட்டிட்டு இருந்திருக்கலாமோ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x