Published : 28 Dec 2024 03:24 PM
Last Updated : 28 Dec 2024 03:24 PM
சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர்கள், 25 மாணவ, மாணவிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச.28) அண்ணா பல்கலை.யில் ஆய்வு மேற்கொண்டார். சனிக்கிழமை பகல் 12.30 மணியளவில், ஆளுநர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருதை தந்தார். தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் ஆளுநரின் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். ஆளுநரின் வருகையையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசினார். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநர், அங்கு பயிலும் மாணவ-மாணவிகள் 25 பேரிடம் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிசிடிவி கேமராக்கள், அவைகளின் செயல்பாடுகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த தினத்தில் பணியில் இருந்தவர்கள், அவர்களின் நடவடிக்கைகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதை எப்படி பல்கலைக்கழக குழுவுக்கு எடுத்துச் செல்வார்கள், காவல் துறை பாதுகாப்பு மற்றும் மாணவ - மாணவிகள் புகார் அளிப்பதற்கு என்ன மாதிரியான வசதிகள் இருக்கிறது, என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்தார். ஆளுநரின் இந்த ஆய்வைத் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT