Last Updated : 28 Dec, 2024 02:54 PM

1  

Published : 28 Dec 2024 02:54 PM
Last Updated : 28 Dec 2024 02:54 PM

“கட்சி பேனரில் ராமதாஸ் படம் மட்டும் போடுங்கள்” - பாமக பொதுக் குழுவில் அன்புமணி பேச்சு

விழுப்புரம் அருகே பட்டானூரில் நடந்த  பாமகவின்  புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார் | படம்: சாம்ராஜ்

விழுப்புரம்: “1967-ல் காங்கிரஸுக்கு நடந்தது, 2026-ல் திமுகவுக்கு நடைபெற உள்ளது” என்று பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், “கட்சி பேனரில் ராமதாஸ் படம் மட்டும் போடுங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியது: “2025-ம் ஆண்டு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் 2026 தேர்தலில் வெற்றிபெறுவோம். நம்மிடம் மக்கள் பலம், இளைஞர் சக்தி, கட்சியின் கொள்கை, தலைமை உள்ளது. ஆனால் நமக்கு தேர்தல் மூலமாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்த ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை. இந்த ஆட்சியை விமர்சிக்க ஊடகத்துக்கு 2, 3 மாதங்களில் தைரியம் வந்துவிடும். முதற்கட்டமாக 120 தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணியாற்ற உள்ளோம். அடுத்த கட்டமாக 114 தொகுதிகளில் பணியாற்ற உள்ளோம். தமிழகத்தில் நாம் சொல்வது பேசு பொருளாக மட்டும் இல்லாமல் கொள்கை முடிவை மாற்றி அமைக்கும் வகையில் அமைந்துள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீடே தவறானது. நாம் கேட்பது 20 சதவீதம். அதிகாரபூர்வமாக அன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 14 சதவீதமாக இருந்தது.

இந்த இடஒதுக்கீடு பெற கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் 37 முறை பலகட்ட போராட்டங்கள் மற்றும் முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். ஆனால் சிலர் தேர்தலுக்காக இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ளதாக கூறுகின்றனர். இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் பேசும்போது நிச்சயமாக செய்து கொடுக்கிறேன் என்று கூறுவார். தனியாக கூட்டத்தொடர் நடத்திய முதல்வர் இந்த இட ஒதுக்கீடை கொடுப்போம் என்றார் .

அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதைப்பற்றி பேசினால் ராமதாஸுக்கு வேலை இல்லை என்று முதல்வர் கூறுகிறார். வேலை இல்லாமலா உங்களை துணை முதல்வராக்கினார்? வேலை இல்லாமலா கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றார்.

நம் உரிமையை பெற நாம் 3 மடங்கு வேலை செய்யவேண்டும். திருவண்ணாமலையில் நாம் நடத்திய உழவர் பேரியக்க மாநாடு போல இந்தியாவில் நடத்தவில்லை. இவை அனைத்தும் நாம் ஒரு மாதத்தில் நடத்தினோம். இதுதான் பாமக. இம்மாநாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்து இருக்கலாம். 2019-ம் ஆண்டு நாம் எடுத்த தவறான முடிவால் மீண்டு வர முடியவில்லை. 2026-ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். அக்கூட்டணியில் பாமக இருக்கும்.

2026-ல் நாம் ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென்றால் அர்ப்பணிப்புள்ள நிர்வாகிகள் கட்சியில் இருக்கவேண்டும். கட்சி பேனரில் ராமதாஸ் படம் மட்டும் போடுங்கள். என் படம் உட்பட யார் படமும் போட வேண்டாம். இதற்காக கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம். 2025-ம் ஆண்டு இதெல்லாம் களையப்படும். திருவண்ணாமலை மாநாடு ஒத்திகைதான். தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சியை நாம் அமைப்போம்.

1967-ம் ஆண்டு காங்கிரஸுக்கு நடைபெற்றது, 2026-ம் ஆண்டு திமுகவுக்கு நடைபெற உள்ளது. தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். இக்கணக்கெடுப்பை நடத்த மற்ற மாநிலங்களில் சட்டத்தில் இடமிருக்கு. ஏனெனில் ஸ்டாலின் ஜப்பானில் உள்ளார். இட ஒதுக்கீடு கொடுக்க மனமில்லை என்று சொல்லிவிடுங்கள். வருங்காலமெம்மால் நம்முடைய காலம்,” என்று அன்புமணி பேசினார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது: “அடுத்து அமையும் ஆட்சியில் பாமக பங்கேற்கும்” - பொதுக் குழுவில் ராமதாஸ் உறுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x