Published : 28 Dec 2024 01:52 PM
Last Updated : 28 Dec 2024 01:52 PM
விழுப்புரம்: தமிழகம், புதுச்சேரியில் அடுத்து அமைய உள்ள ஆட்சியில் நாம் பங்கேற்போம் என இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் ராமதாஸ் உறுதியேற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், கௌரவத் தலைவர் கோ.க மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, பேராசிரியர் தீரன், பு தா அருள்மொழி, முன்னாள் அமைச்சர் ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்புரையாற்றி பேசியது: “பாமகவுக்கு தனி வரலாறு உள்ளது. தனி நபர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சிகளுக்குகிடையில் மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி பாமக. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த குமிடிப்பூண்டி முதல் கன்னியாகுமாரி வரை 95 ஆயிரம் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டக் களத்துக்கு கொண்டு வந்தேன். அப்போதைய அரசு 21 உயிர்களை சுட்டுக்கொன்றது. 1989-ம் ஆண்டு வன்னியர் சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு, நமக்கான உரிமைகளை மீட்டெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளும் கட்சி பு. தா.அருள்மொழி உள்ளிட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்தது. கட்சியை தொடங்குவதில் பின்வாங்காமல், விழுப்புரத்தில் நடைபெற்ற பேரணியில் தடியடி நடத்தியது. இப்படி பல்வேறு அடக்குமுறைகளுக்கு இடையே பாமக தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால் 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி நம் பக்கம். 2026-ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தப்பு செய்தால் மீண்டும் தப்பு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம்.
தமிழகம், புதுவையில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி வரக்கூடாது என சபதம் ஏற்போம். நீங்கள் செல்போனை கீழே போட்டுவிட்டு உழைக்க வேண்டும். கட்சியை வளர்க்கவேண்டும். இரு கைகளைகூப்பி வணக்கம் சொல்லும்போது கைகளுக்கு இடையில் செல்போன் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT