Published : 28 Dec 2024 06:24 AM
Last Updated : 28 Dec 2024 06:24 AM
சென்னை: இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் மன்மோகன் சிங் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: பணிவு மற்றும் நேர்மையின் உருவமாக விளங்கியவர் மன்மோகன் சிங். இந்தியா பொருளாதாரத்தின் சவாலான காலகட்டத்தில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியவர். அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
துணை முதல்வர் உதயநிதி: இந்திய பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கின் காலகட்டத்துக்கு முன் - பின் என குறிப்பிடும்படியாக மாற்றியமைத்தவர். அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மன்மோகன் சிங்கின் நிதிக் கொள்கைகள் தான் நம் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன. திறைமையான நிர்வாகி. அவர் மறைவு வருத்த மடைய செய்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பொருளாதாரத்தில் வலுவான புத்திசாலித்தனம் கொண்ட அரசியல் தலைவர் மன்மோகன் சிங். அவரது பங்களிப்பு மக்கள் சேவையாற்றும் அனைவரையும் ஊக்குவிக்கும்.
கனிமொழி எம்.பி.: உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த நேரத்தில் கூட, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்தியவர் மன்மோகன் சிங். அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மனிதநேயமிக்க தேசியவாதியை நாட்டு மக்கள் இழந்துவிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மன்மோகன் சிங்கின் புன்னகை பூத்த முகத்தையும், இனிமை ததும்பும் உரையாடலையும் என்னால் மறக்க முடியாது.
முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை: ஒரு ஆரோக்கியமான அரசியலை விட்டு சென்றிருக்கிறார் மன்மோகன் சிங்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் அவருக்கு எப்போதும் உண்டு.
தி.க. தலைவர் கி.வீரமணி: பண்பட்ட பொதுவாழ்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டான மன்மோகன் சிங், வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.
விசிக தலைவர் திருமாவளவன்: சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த முதல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: அரசியல் பொது வாழ்வில் எளிமை, நேர்மை, துணிவுக்கு அடையாளமாக வாழ்ந்த மன்மோகன் சிங்கின் மறைவு மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது.
நடிகர் ரஜினிகாந்த்: மன்மோகன் சிங், மிக அற்புதமான மனிதர். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இந்தியா தனது தலைசிறந்த அரசியல்வாதி மற்றும் அறிஞர்களில் ஒருவரை இழந்துவிட்டது.
தவெக தலைவர் விஜய்: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்துக்காக மன்மோகன் சிங்கின் ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.
இவர்களுடன் பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் முனிருத்தீன் ஷெரீப் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT