Published : 28 Dec 2024 12:34 AM
Last Updated : 28 Dec 2024 12:34 AM

5 கோயில்களின் 542 கிலோ காணிக்கை தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற மும்பைக்கு அனுப்பிவைப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட 5 கோயில்களில் காணிக்கையாக பெறப்பட்ட 542 கிலோ தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவதற்காக உருக்கு ஆலைக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், நாமக்கல் மாவட்டம் நரசிம்ம சுவாமி கோயில், சேலம் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் ஆகிய 5 கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்று, பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 541 கிலோ 781 கிராம் எடையுள்ள தங்க நகைளை, சுத்தமான தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கு, உருக்கு ஆலைக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு சமயபுரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜூ, க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில், ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் அதுல் பிரியதர்ஷினியிடம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் காணிக்கை நகைகளை ஒப்படைத்தனர்.

மேலும், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இருப்பில் இருந்த 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்யும் வகையில் ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோயில் அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் உணவு பரிமாறினர்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் சீ.கதிரவன், ந.தியாகராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்கள் (சென்னை) மங்கையற்கரசி, வன்மதி, கல்யாணி, அ.இரா.பிரகாஷ், சபர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x