Last Updated : 27 Dec, 2024 10:40 AM

31  

Published : 27 Dec 2024 10:40 AM
Last Updated : 27 Dec 2024 10:40 AM

அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து கோவையில் அண்ணாமலை சாட்டையடி போராட்டம்

படங்கள்: ஜெ.மனோகரன்.

கோவை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து இன்று (டிச.27) காலை போராட்டம் நடத்தினார். கோவை,காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் இன்று காலை 10 மணியளவில் தொண்டர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “இன்று நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இது தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

எதற்காக 6 முறை சாட்டையடி என்று நீங்கள் கேட்கலாம். முருகப் பெருமானிடம் இந்த ஆறு சாட்டையடி மூலம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளோம். நம் தமிழ் மண்ணில் உடலை வருத்தி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதலுக்கு ஒரு விளைவு இருக்கும் என்பது நம்பிக்கை. நான் அந்த மரபையே பின்பற்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். தெரிந்தோ தெரியாமலோ நாங்களே கூட ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அதற்குக் கூட இது தண்டனையாக இருக்கட்டும்.

நான் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கை விசாரித்தேன். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தேன். அப்போது அந்தச் சிறுமியின் தாய் என்னிடம் “குற்றவாளியை பிடித்துவிட்டீர்கள், என் மகளைத் திருப்பித் தருவீர்களா?” எனக் கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை அரசியலில் பயணிக்க வைத்தது. எல்லோரையும் போல் ஒரு பிரச்சினை வரும்போது அதைப்பற்றி பேசிவிட்டு பின்னர் மறந்துவிட்டு அதன் பின்னர் அடுத்த பிரச்சினையைப் பேசும் அரசியல்வாதியாக என்னால் இருக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் என்னை வெகுவாக பாதித்துவிட்டது.

காவல்துறையில் எஃப்ஐஆர் கசிவது என்பதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்திருக்கிறேன். எஃப்ஐஆர் பிரதி ஒரு நகல் நீதிமன்றத்துக்கும், ஒரு நகல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் கொடுக்கப்படும். இந்நிலையில் முதல் தகவல் அறிக்கையை யாரோ வேண்டுமென்றே பதிவிறக்கம் செய்து பரப்பியிருக்க வேண்டும். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் உள்ளடக்கிய முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காவல்துறை சொல்வதுபோல் அந்தப் பெண் காவல்துறை நடவடிக்கையில் திருப்தியாக இருக்க முடியாது. அந்தக் கயவன் முதல் குற்றத்துக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இன்னொரு சம்பவம் நடந்திருக்காது.

அதனால், நான் நன்றாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை காலணியை அணியப் போவதில்லை.இந்த ஆட்சி தவறு செய்கிறது. அறவழியில் போராடக் கூட அனுமதியில்லை. எல்லாவற்றையும் கண்டித்தே நாங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். நாங்கள் தவறுகளைக் கண்டித்து அரசியல் செய்கிறோம்.

அரசியலில் தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் பெரிய பொருட்டல்ல. 2026 தேர்தலில் தோற்றாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன். நான் சாராயம் விற்ற காசிலும், கமிஷன் காசிலும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மாறாக விவசாயத்தில் வந்த காசை வைத்து நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டேன்.

லண்டன் சென்று திரும்பியபின் என் அரசியல் பார்வை மாற்றம் பெற்றுள்ளது. மற்றபடி என்னைப் பற்றி சமுகவலைதளங்களில் விமர்சிப்பவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை” என்றார்.

முன்னதாக, அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட போது பாஜக தொண்டர்கள் வெற்றிவேல், வீரவேல் என்றும், வேண்டாம், வேண்டாம் சாட்டையடி வேண்டாம் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

மன்மோகன் சிங்குக்கு இரங்கல்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அண்ணாமலை, “நம் நாட்டுக்கு புதிய பொருளாதார கொள்கையை வகுத்துத் தந்தவர் மன்மோகன் சிங். அவரது மறைவுக்காக பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் நாட்டுக்கு வகுத்தத் தந்த பொருளாதாரக் கொள்கைகளை அன்புடன் நினைவுகூர்வோம், நன்றி சொல்வோம்” என்றார். மேலும், மன்மோகன் சிங் மறைவை ஒட்டி இன்று நடைபெறவிருந்த பாஜக போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x