Published : 27 Dec 2024 02:07 AM
Last Updated : 27 Dec 2024 02:07 AM
படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் உள்ள, மாநிலத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. படிப்பு, பணியிடங்களில்கூட பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திமுக ஆட்சியில், பல்வேறு மாவட்டங்களிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம்புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதை கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களை தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கவும், காவல் துறைக்கு இன்றுவரை முழு சுதந்திரம் வழங்கவில்லை. திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சியை கண்டித்து, அதிமுக சார்பில் டிசம்பர் 27-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கட்சி ரீதியான மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைமை செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க முன்னாள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT