Published : 24 Dec 2024 01:03 PM
Last Updated : 24 Dec 2024 01:03 PM

எம்ஜிஆர் நினைவுநாள்: அதிமுகவினர் அஞ்சலி; இபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் மலர்வளையங்கள் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், “குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம்.” என்று எடப்பாடி முன்மொழிய அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37-வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதில்,

> அராஜகத்தின் அடையாளம், திமுக-வை வீழ்த்துகின்ற தெய்வ சக்தியாய் எம்ஜிஆர் திகழ்ந்தார். அவர்வழி நின்றே, நேர்வழி சென்றால், நாமும் எதிரிகள், துரோகிகளை வீழ்த்துவோம்.

> பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, வஞ்சக மனம் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிய திமுக-வை, வேரோடும், வேரடி மண்ணோடும், வீழ்த்திட உறுதி ஏற்கிறோம்.

> நீட் தேர்வு ரத்து எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? சிலிண்டர் மானியம் எங்கே? எங்கே? டீசல் விலை குறைப்பு எங்கே? வெள்ள நிவாரணப் பணிகள் எங்கே? பழைய ஓய்வூதியத் திட்டம் எங்கே? இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை எங்கே? எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே...? திமுக அரசே, பதில் தராமல் விடமாட்டோம்.

> முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலே, விலைவாசி உயர்வு, 43 மாதகால திமுக ஆட்சியிலே, மூன்று முறை மின் கட்டண உயர்வ, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என, மக்களை வரிகளால் வாட்டி வதைக்கும், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவோம்.

> அம்மா உணவகங்கள், அம்மா மருந்தகங்கள், மடிக் கணிணி திட்டங்கள், அம்மா இருசக்கர வாகனம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் - என்றே அதிமுக ஆட்சியின் முத்தான திட்டங்களை முடக்கி, அதிமுகவின் புகழை மறைக்கிறது, திமுக ஆட்சி.

> குடும்ப அரசியல் நடத்தி, மகனுக்கு மகுடம் சூட்டி தொண்டனை, துச்சமென நினைப்பதுதான் திமுக-வின், வாடிக்கை... வேடிக்கை... இவற்றோடு, அன்றாடம் மக்களை ஏமாற்றி வரும் முதல்வரின், மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பொய் முகத்தை, வெளிச்சம்போட்டுக் காட்டுவோம்.

> குடும்ப ஆட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும், தமிழக மக்களைக் காப்பாற்ற எம்ஜிஆர் வழியிலே, தீயசக்தி திமுக-வை, விரட்டி அடிக்க எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்போம், என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x