Published : 24 Dec 2024 12:41 PM
Last Updated : 24 Dec 2024 12:41 PM
சென்னை: காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் பாக்கியநாதன் காலமானார்.
மதுரை மாவட்டம், மேலுலூர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் போலவே, கக்கனும் எளிமையான நேர்மையான மனிதர் என பெயர் பெற்றவர். கக்கனுக்கு 5 மகன்கள், ஒரு மகள். இரண்டாவது மகன் பாக்கியநாதன் (82). இதய மற்றும் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவர். இரண்டு ஆண்டுக்கு முன்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாததால், சில பரிசோதனைகளுக்கு ரூ.4 ஆயிரம் அளவுக்கு செலவு செய்ய வேண்டியிருந்ததால், மருத்துவ செலவுக்கு உதவும்படி, பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவமனையில் கட்டண வார்டுக்கு மாற்றப் பட்ட பாக்கியநாதனுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டன. சில மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சென்னை வியாசர்பாடியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே பாக்கியநாதன் காலமானார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, கக்கனின் சகோதரர் மகளும் தமிழக காங்கிரஸ் துணை தலைவருமான இமையா கக்கன் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மின்மயானத்தில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி கடந்த ஆண்டு காலமானார். மகன்கள் ரங்கநாதன், கண்ணன் உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனது இரங்கல் செய்தியில், “பி.கே.பாக்கியநாதன் மறைந்த செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT