Published : 24 Dec 2024 11:38 AM
Last Updated : 24 Dec 2024 11:38 AM
சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதற்கு மோசமான சாலை, வாகன பழுது போன்றவற்றுடன் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது. வேக வரம்பை மீறி அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது. செல்போன் பேசியபடியே வாகனங்களை இயக்குவது என வாகன ஓட்டிகளால் மீறப்படும் விதிமீறல்களும் காரணமாக அமைகின்றன. பொதுமக்கள் தான் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார்கள் என்றால். அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கூட சில மையங்களில் இதுபோல் செயல் படுகின்றனர்.
சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டியது குறித்து புகார் எழுந்த நிலையில், அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு, புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி மேல் செல்போன் பேசியபடி அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில் “எக்காரணத்தை கொண்டும் வண்டி ஓட்டும்போது, பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசக்கூடாது. ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டு பேருந்து ஓட்டியது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் நோட்டீஸ் பலகைகள் மூலம் தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT