Published : 23 Dec 2024 03:46 PM
Last Updated : 23 Dec 2024 03:46 PM
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் நாள்தோறும் தாமதமாக இயக்கப்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை ஆகிய புறநகர் பகுதிகளுக்கு தினசரி 320 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட வழித்தடத்தில் மட்டும் நாள்தோறும் 6 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் காரணமாக 52 ரயில் சேவைகள் 6 மாதங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன. அத்துடன், இயக்கப்படும் ரயில்களும் குறித்த சமயத்தில் அல்லாமல் தாமதமாக இயக்கப்படுவதால், தினசரி பணிக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, ஆவடியை சேர்ந்த ரயில் பயணி சீனிவாசன் என்பவர் கூறியதாவது: புரசைவாக்கத்தில் பணிபுரிகிறேன். ஆவடியில் இருந்து சென்ட்ரல் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் அலுவலகம் செல்வேன். ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்ல 45 நிமிடங்கள் போதும். ஆனால், தற்போது ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் ஒருமணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. பராமரிப்பு என்ற பெயரில் ரயில் சேவை குறைக்கப்பட்டதோடு, இயக்கப்படும் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ரயில் காலை 10.25 மணிக்கு ஆவடிக்கு வர வேண்டும். ஆனால், பெரும்பாலான நாட்களில் இந்த ரயில் குறைந்தது 15 நிமிடங்களாவது தாமதமாக வருகிறது. இதேபோலதான், பெரும்பாலான ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
அத்துடன், இயக்கப்படும் ரயில்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படுவது கிடையாது. உதாரணமாக, திருத்தணியில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மெமூ ரயில் காலை 11.05 மணிக்கு ஆவடிக்கு வரும். இந்த ரயிலைவிட்டால், சென்ட்ரலுக்கு அடுத்த ரயில் 11.50-க்குத் தான் வரும். அதாவது, சுமார் 45 நிமிடத்துக்கு சென்ட்ரலுக்கு ரயில் சேவை கிடையாது. இதனால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. அதே சமயம், 11.50 மணிக்கு பிறகு 10 நிமிட இடைவேளையில் நண்பகல் 12 மணிக்கு சென்ட்ரலுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. எனவே, இயக்கப்படும் ரயில்கள் 10 அல்லது 15 நிமிட சீரான இடைவெளியில் இயக்கப்பட்டால் பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்களின் தாமதம் குறித்து ரயில் நிலையங்களில் முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை. ரயில் வருவதற்கு கடைசி நிமிடத்தில் தான் அறிவிப்பு செய்யப்படுகிறது. இதனால், பயணிகள் முன்கூட்டியே தங்களது பயண திட்டத்தை மாற்ற முடியாத நிலை உள்ளது. தற்போது, பெரும்பாலான ரயில் நிலையங்களில் பணிபுரியும் நிலைய மேலாளர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தமிழ் தெரியாததால், மொழி பிரச்சினை காரணமாக அவர்களிடம் ரயில்கள் தாமதம் குறித்து புகார் தெரிவிக்க முடியவில்லை.
மேலும், பயணிகள் செல்லும் ரயிலுக்கு முன்னுரிமை வழங்காமல், பணிமனைக்கு செல்லும் ரயிலுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. திருவள்ளூர், அரக்கோணத்துக்கு செல்லும் ரயில்கள் இரவு நேரங்களில் ஆவடி ரயில் நிலையத்துக்கு வெளியே சிக்னல் கிடைக்காமல் 10 முதல் 20 நிமிடங்கள் நிற்க வைக்கப்படுகிறது. இதனால், பணி முடிந்து களைத்து போய் வீடு திரும்புவோர் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். மொத்தத்தில் பயணிகளின் வசதிக்காக ரயில்களை இயக்காமல், அதிகாரிகள் தங்களின் வசதிக்காக ரயில்களை இயக்குகின்றனரா என்றே எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொரட்டூரை சேர்ந்த பெண் பயணி கீதா என்பவர் கூறியதாவது: தலைமை செயலகத்தில் பணிபுரிகிறேன். கடற்கரை செல்லும் ரயிலில் பயணிப்பேன். தினமும் இந்த ரயில்கள் வியாசர்பாடியில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை ஆங்காங்கே நிறுத்தி இயக்கப்படுகிறது. இதனால், தினமும் தாமதமாக அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், சில நேரங்களில் சென்ட்ரல் வரை ரயிலில் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் அலுவலகம் செல்கிறேன். இதனால், பண விரயம், நேர விரயம் ஏற்படுகிறது. அத்துடன், பீக் ஹவர் நேரங்களில் 12 பெட்டிக்கு பதிலாக, 9 பெட்டிகள் மற்றும் 8 பெட்டிகள் கொண்ட ‘மெமூ’ ரயில்கள் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், என்னை போன்ற பெண் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் பராமரிப்பு பணி முடிந்ததும் மீண்டும் இயக்கப்படும். மின்சார ரயில்கள் தற்போது 95% சரியான நேரத்தில் இயக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாக இயக்கப்படுகிறது. ரயில்கள் தாமதமாக வந்தால் முன்கூட்டியே அறிவிப்பு செய்ய வேண்டுமென நிலைய மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். தற்போது இயக்கப்படும் மொத்த ரயில்களில் 4 ரயில்கள் மட்டுமே 9 பெட்டிகளை கொண்டு இயக்கப்படுகிறது. அவை இந்த மாதத்துக்குள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுவிடும். வடமாநிலத்தை சேர்ந்த ரயில் நிலைய மேலாளர்களின் மொழி பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT