Last Updated : 20 Dec, 2024 03:23 PM

3  

Published : 20 Dec 2024 03:23 PM
Last Updated : 20 Dec 2024 03:23 PM

பழங்குடியின பெண் எம்.பி-யை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை: ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக ராகுல் காந்தி நடந்து கொள்கிறார் என்றும் பழங்குடியின பெண் எம்பி-யை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வரும் காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களை அம்பலப்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

அவர் பயன்படுத்திய வார்த்தைகளை வழக்கம்போல திரித்து இண்டி கூட்டணி கட்சிகள் மலிவான அரசியலில் ஈடுபட்டனர். டாக்டர் அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் திட்டமிட்டு தோற்கடித்து அவமானப்படுத்திய, 'பாரத ரத்னா' விருது கொடுக்காமல் அவமதித்த காங்கிரஸ் கட்சியையும், பண்டிட் நேரு குடும்பத்தினரையும் கண்டித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது நேரு குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தி, பாஜக எம்பிக்களை தள்ளிவிட்டு ஆணவத்துடன் நடந்து கொண்டுள்ளார். இதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘மக்களவையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்த அட்டூழியத்தின்போது, தனக்கு நெருக்கமான நின்ற ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் தனது கண்ணியமும், சுயமரியாதையும் பாதிக்கப்பட்டது’ என நாகலாந்து பாஜக எம்.பி பாங்னோன் கோன்யக், மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரிடம் புகார் கடிதம் அளித்துள்ளார்.

ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக ராகுல் காந்தி நடந்து கொண்டு வருகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. தனது அநாகரிக, ஆணவச் செயலுக்கு ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நாகலாந்து பழங்குடியின பெண் எம்.பி அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மீது மரியாதையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவரும் ராகுல் காந்தியின் அநாகரிகச் செயலை கண்டிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x