Published : 03 Dec 2024 04:40 PM
Last Updated : 03 Dec 2024 04:40 PM
ஓய்வுபெற 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ்பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கடந்த மாதம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார் தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி. அதற்கு, திருவள்ளுவன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சொல்லப்பட்டது.
அதேசமயம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த இராம.கதிரேசனுக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த 23-ம் தேதி எவ்வித சிக்கலுமின்றி பணி ஓய்வுபெற்றிருக்கிறார். இதுவும், ஆளுநர் ஆர்.என்.ரவி கதிரேசனை அழைத்து தேநீர் விருந்தளித்ததும் இப்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
செட்டிநாட்டரசர் எம்.ஏ.எம்.ராமசாமியின் ஆளுகையில் இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திவாலாகும் நிலைக்குப் போனதால் 2013-ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதை அரசுடமையாக்கி காப்பாற்றினார். அதன் பிறகும் அவ்வப்போது இங்கு சலசலப்புகள் எழுந்து அடங்கிய நிலையில், டாக்டர் இராம.கதிரேசன் கடந்த 24.11.2021-ல் இங்கு புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றார். இங்கேயே படித்து வளர்ந்தவர் என்பதால் கதிரேசனின் செயல்பாடுகள் பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் என ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் எதிபார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழக ஊழியர்கள், “2021-22, 2022-23 கல்வியாண்டுகளில் பல்கலை. உறுப்புக் கல்லூரிகளிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணம் முறையாக பல்கலைக்கழக கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகத்திற்கு கோடிகளில் வருவாய் இழப்பு. அதேபோல 2022, 2023-ம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு வாங்கியதைவிட ரூ.10 லட்சம் அதிகமாகக் கொடுத்து இணைவுக் கல்லூரிகளுக்கு விடைத்தாள்களை வாங்கி இருக்கிறார்கள்.
புதிய பாடப் பிரிவுகளுக்கான அங்கீகாரம், கல்லூரிகளுக்கான அங்கீகாரம், வருடாந்திர புதுப்பித்தல் என தொட்டது அனைத்துக்கும் தனியார் கல்லூரிகள் கமிஷன் கொடுத்தே காரியம் முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தேர்வர்களை அமர்த்துதல், பாடத்திட்ட குழுவுக்கு நிபுணர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கும் ‘வேண்டியதைக்’ கொடுத்தால் தான் வேலை நடப்பதாகச் சொல்கிறார்கள் இணைவுக் கல்லூரி ஆசிரியர்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் கதிரேசனுக்கு எதிராக திரும்பி இருக்கும் நிலையில், பல்கலைக்கழக அலுமினி சங்க நிதியில் இருந்து ரூ. 6 கோடியை தவறான வழியில் பயன்படுத்தியுள்ளதாக அலுமினி தரப்பில் கதிரேசனுக்கு எதிராக 200 பக்க புகார் கடிதம் ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கதிரேசனின் பதவிக்காலம் முடியும் தருணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிட மாற்றங்கள், புதிய நியமனங்கள் கடந்த 3 மாதங்களில் நடந்துள்ளது. இதுகுறித்தெல்லாம் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து, தவறிழைத்த அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அப்படி இருந்தும் கதிரேசன் சிக்கலின்றி பணி ஓய்வுபெற்றுள்ளார்” என்றனர்.
இந்த நிலையில், பணி ஓய்வுபெற்ற இராம.கதிரேசனை அழைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தளித்திருப்பது பல்கலைக்கழக ஆசியர்கள், ஊழியர்களிடையே மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ரவி, “ஊழல் புகாரில் சிக்கியுள்ள துணைவேந்தர் கதிரேசனுக்கு ஆளுநர் விருந்தளித்து கவுரவித்துள்ளது மிகுந்த வேதனையைத் தருகிறது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை ஊழல் புகாரில் இடைநீக்கம் செய்த ஆளுநர், கதிரேசனுக்கு விருத்து வைத்து உபசரித்தது எந்த விதத்தில் நியாயம்?” என்று ஆவேசப்பட்டார். ஏற்கெனவே ஆளாளுக்கு தான்தோன்றித்தனமாக செயல்பட்டதால் தான் பல்கலைக்கழகம் மூழ்கும் நிலைக்குப் போனது. இதை உணர்ந்து அரசும் ஆளுநரும் இதில் அரசியல் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழகத்துக்கு இன்னொரு கஷ்டம் வராமல் காக்க வேண்டும்!
நேர்மையாளருக்கு ஆளுநர் தேநீர் விருந்தளித்ததில் தவறில்லையே!
மேற்கண்ட செய்தி, ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பானது என மறுக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் நல சங்கத்தின் ஒரு பிரிவின் தலைவர் பேராசிரியர் தமிழினியன், ‘கடந்த 3 ஆண்டுகளில் நேர்மையான, ஒளிவுமறைவற்ற செயல்பாடுகள் வாயிலாக கதிரேசன் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் நிர்வாகம் செய்ததை அனைவரும் அறிவர். அனைத்து நிர்வாகப் பணிகளும், நிதிக்குழு, ஆட்சிமன்ற குழு ஒப்புதலுடன், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே மேற்கொள்ளப்பட்டன.
இணைப்பு கல்லூரி அங்கீகாரம் தொடர்பான பணிகள், வல்லுநர் குழு ஆராய்ந்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன், எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத வகையில் நடைபெற்றதை இணைப்புக்கல்லூரி நிர்வாகத்தினரே ஒப்புக் கொண்டுள்ளனர். ஓய்வுபெறும் துணைவேந்தர்களுக்கு, ஆளுநர் மாளிகையில் பிரிவு உபசார விழா நடத்தும் மரபு கடந்த ஆண்டு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் வேல்ராஜ் பதவி நிறைவுற்று செல்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைப் பின்பற்றி, நேர்மையாக பணியாற்றிய கதிரேசனுக்கும் நடத்தப்பட்டதில் தவறேதும் இல்லையே! பல்கலைக்கழகத்தில் கதிரேசன் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருடைய புகார்களை புறந்தள்ளி, பெரும்பான்மையான ஆசிரியர், ஊழியர்கள் விரும்பத்தக்க வகையில் உண்மையை நிலைநாட்ட வேண்டுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT