Published : 03 Dec 2024 06:10 AM
Last Updated : 03 Dec 2024 06:10 AM
சென்னை: மைசூரிலிருந்து சென்னைக்கு வந்த சதாப்தி விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட 9 பவுன் நகை அடங்கிய கைப்பையை உரியவரிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். இதை ஒப்படைக்க உதவிய, தூய்மைப் பணியாளரின் நேர்மையை ரயில்வே போலீஸார் பாராட்டினர்.
மைசூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு சதாப்தி விரைவு ரயில் கடந்த 29-ம் தேதி இரவு வந்தது. இதிலிருந்த பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு, பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, அந்த ரயிலில் இ-1 பெட்டியில் இருக்கை எண் 1-ல் சிறிய கைப்பை இருந்ததை தூய்மைப் பணியாளர் கார்த்திக் என்பவர் கண்டார்.
அதை எடுத்து திறந்து பார்த்தபோது சுமார் 9 பவுன் எடை கொண்ட, 2 வளையல்கள், கம்மல், ஆரம், நெக்லஸ் ஆகிய ஆபரணங்கள் இருந்தன. இவற்றை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் சிவப்பிரியாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த ஆபரணங்களுக்கு உரியவர் தொடர்பாக ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், இந்த ஆபரணங்கள் பல்லாவரம் 200 அடி சாலையில் வசிக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சதாப்தி ரயிலில் பயணித்தபோது, நகைகள் அடங்கிய கைப்பையை மறந்துவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
வீட்டுக்கு சென்ற பிறகு பையை தவறவிட்டதை அறிந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸில் புகார் கொடுக்க வந்தனர். அப்போது, அவரிடம் விசாரித்தபோது, சதாப்தி விரைவு ரயிலில் தூய்மைப் பணியின்போது, கிடைத்த கைப்பைக்கு உரியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நகைகள் அடங்கிய பையை ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர்.
தங்க ஆபரணங்கள் அடங்கிய கைப்பை உரியவரிடம் கிடைக்க உதவிய தூய்மைப் பணியாளர் கார்த்திக்கின் நேர்மையை ரயில்வே போலீஸார், பயணி ஸ்ரீகாந்த் ஆகியோர் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT