Published : 03 Dec 2024 05:59 AM
Last Updated : 03 Dec 2024 05:59 AM

சென்னை - பினாங்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் டிச. 21-ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

சென்னை: சென்னை - பினாங்கு இடையே வரும் 21-ம் தேதி நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடங்குகிறது. விமான கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு சுற்றுலா மாநாடு மற்றும் கண்காட்சியின் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் குணசேகரன், விற்பனை பிரிவு தலைவர் சிதி சாரா பிந்தி இஸ்மாயில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆக்னல் பிண்டோ, ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

மலேசியா நாட்டின் கட்டுப்பாட்டில் தீவு மாநிலம் பினாங்கு உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது. அங்கு தமிழர்கள் அதிகம் வசித்தாலும், இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.

இந்தியாவில் இருந்து குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை இயக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் சென்னை - பினாங்கு - சென்னை இடையே தினசரி நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.

சென்னை - பினாங்கு இடையே நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. தினமும் அதிகாலை 2.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மலேசியா நேரப்படி காலை 8.30 மணிக்கு பினாங்கு சென்றடையும். பினாங்கில் இருந்து புறப்படும் விமானம் சென்னைக்கு காலை 10.30 மணிக்கு வந்தடையும். இந்த விமானத்தில் 186 இருக்கைகள் உள்ளன.

சென்னையில் இருந்து பினாங்கிற்கும், பினாங்கில் இருந்து சென்னைக்கும் தலா ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, சென்னையில் இருந்து பினாங்கு செல்ல வேண்டும் என்றால், மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பினாங்கு செல்ல வேண்டும். இதனால், அதிக நேரம் ஆகும்.

சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுவதால், பயண நேரம் வெகுவாக குறையும். சுற்றுலா, வர்த்தக உறவு, தொடர்பு, ஒற்றுமை, நட்பு மேம்படும். குறிப்பாக, இந்தியாவில் இருந்து பினாங்கிற்கு எவ்வளவு பயணிகள் வருகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களை சேகரிக்க முடியும்.

டெல்லி, மதுரை, கோவை உள்ளிட்ட எந்த நகரங்கள், நாடுகளில் இருந்தும் சென்னை வழியாக பினாங்கு செல்லலாம். 7 பேர் ஒன்றாக சேர்ந்து குழு டிக்கெட் எடுக்கும் வசதியும் உள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரியில் பினாங்கில் 8-வது ஆண்டாக மாநாடு, கண்காட்சி, ரோட் ஷோ நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனை கண்டுகளிக்க தமிழர்கள் பினாங்கு வந்து செல்வதற்கு இந்த நேரடி விமான சேவை பெரிய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x