Published : 03 Dec 2024 06:05 AM
Last Updated : 03 Dec 2024 06:05 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணிகள் முடிவடைந்த நிலையில், 871 பூங்காக்களும் இன்று (டிச.3) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவ. 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சென்னையில் 341 இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் கோயில் தெரு, இந்திரா காந்தி தெரு, கோடம்பாக்கம் பட்டேல் தெரு, சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட துரைப்பாக்கம் சாய் நகர் 16-வது தெரு உள்ளிட்ட 7 இடங்களில் மட்டும் மழைநீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று காலை வரை 5 லட்சத்து 54 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 192 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 10 ஆயிரத்து 226 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
புயலை முன்னிட்டு கடந்த நவ. 30, டிச.1 தேதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள் மூடப்பட்டன. கனமழைக்கு பிறகு சென்னை மாநகரம் முழுவதும் சாலைகள் மற்றும் பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் மொத்தம் 7 ஆயிரத்து 600 டன் குப்பை, கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி பராமரித்து வரும் 871 பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணி முடிவடைந்த நிலையில் இன்றுமுதல் மீண்டும் பூங்காக்கள் திறக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT