Published : 18 Aug 2014 11:05 AM
Last Updated : 18 Aug 2014 11:05 AM

மின்னல் தாக்கி 2 ஆண் யானைகள் பலி?- வனத்துறையினர் புகைப்படம் தர மறுப்பதால் சந்தேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 ஆண் யானைகள் இறந்தன. இவற்றின் மரணம் தொடர்பாக யானை ஆர்வலர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் ஜவளகிரி பகுதியில் சனிக்கிழமை மாலை வனத்துறையினர் களத் தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜவளகிரி காப்புக்காடு பகுதியில் நீர்நிலையை ஒட்டி 2 ஆண் யானைகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இவற்றில் ஒரு யானைக்கு 15 வயதும், மற்றொரு யானைக்கு 7 வயதும் இருக்கும். மாவட்ட வன அலுவலர் உலகநாதன், உதவி வனப் பாது காவலர் சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலையில் நேற்று 2 யானைகளின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டன.

இவற்றிடம் இருந்து 55 செ.மீட்டர் நீளம் கொண்ட ஒரு ஜோடி தந்தம் மற்றும் 30 செ.மீட்டர் நீளம் கொண்ட ஒரு ஜோடி தந்தம் என இரண்டு ஜோடி தந்தம் மீட்கப்பட்டதாக உதவி வனப் பாதுகாவலர் சவுந்திரராஜன் தெரிவித்தார். யானைகளின் இறப்பிற்கான காரணம் குறித்து தெரிவித்த மாவட்ட வன அலுவலர் உலக நாதன், ‘ஒருவாரத்துக்கு முன் பாகவே மின்னல் தாக்கி இரண்டு யானைகளும் இறந்துவிட்டதாக, யானை களுக்கு பிரேத பரி சோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் தெரிவித்ததாக’ கூறினார்.

தந்தத்துக்காக வேட்டையா?

இதனிடையே ஜவளகிரி காட்டில் 2 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டு தந்தங்கள் திருடப்பட்டதாக நேற்று காலை முதலே தகவல் பரவியது. மேலும், இறந்துபோன 2 யானை களின் புகைப்படங்களை பத்திரிகைக்கு தர ஓசூர் வனக் கோட்ட அதிகாரிகள் மறுத்தனர்.

இந்த இரு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தும் யானை ஆர்வலர்கள், ‘இறந்த யானை களின் பிரேதப் பரிசோதனைக்கு முன்பும், பரிசோதனை நடத்தும் போதும் ஆவண தேவைக்காக வனத்துறையினர் புகைப்படம் எடுப்பது வழக்கம். மேலும் அவற்றிடம் இருந்து எடுக்கப்பட்ட தந்தங்களை யும் புகைப்படம் எடுத்து வைப்பர்.

தற்போது இறந்த 2 யானைகளின் சாவில் மர்மம் எதுவும் இல்லை எனில் அவற்றின் புகைப்படங்களை வனத்துறையினர் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஓசூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் உலகநாதனின் செல்போன்மூலம் கருத்தறிய பல முறை முயன்றும் இயல வில்லை. உதவி வனப்பாதுகாவலர் சவுந்திரராஜனிடம் பேசியபோது, ‘புகைப்படம் எடுக்கவே இல்லை’ என்றும், ‘வனப்பகுதியில் இருக்கிறோம், படம் அனுப்ப வசதியில்லை’ எனவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x