Published : 21 Nov 2024 06:13 AM
Last Updated : 21 Nov 2024 06:13 AM

கோ​யம்​பேடு சந்தை செயல்​படாத நேரத்​தி​லும் வாயில்களை திறந்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்​பாட்டம்

சென்னை: கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி அங்காடிகள் தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக காய்கறி சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தையில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை நுழைவு வாயில்கள் மூடப்படுகின்றன. அதன் பிறகு சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. நள்ளிரவு 12 மணிமுதல் விற்பனை தொடங்குகிறது.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் தொலைதூரத்தில் இருந்து வரும் வெங்காயம், பூண்டு போன்றவற்றை ஏற்றி வரும் லாரிகளை பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரையிலான காலகட்டத்தில் அனுமதிக்க வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு சந்தை நிர்வாக அதிகாரி இந்துமதி, சிஎம்டிஏ செயற்பொறியாளர் ராஜன்பாபு ஆகியோர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ``பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் சந்தை வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த நேரத்தில் வாகனங்களை அனுமதித்தால், தூய்மைப் பணி பாதிக்கும். அதனால் அனுமதிக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்'' என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, வியாபாரத்தை தொடர்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x