Published : 21 Nov 2024 02:54 AM
Last Updated : 21 Nov 2024 02:54 AM
சென்னை: ‘‘அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே ஓய்வூதிய கருத்துருக்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் பரிசீலனை செய்து விரைவாக வழங்க முடியும்’’ என மாநில கணக்காயர் வெள்ளியங்கிரி தெரிவித்தார்.
தணிக்கை வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் சார்பில்,தணிக்கை செய்வது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. இதை, தமிழ்நாடு நிதித் துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘ஓய்வூதிய பலன்கள் கிடைக்க அரசு மற்றும் தணிக்கை துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தின், மாநில கணக்காயர் வெள்ளியங்கிரி, ‘‘தமிழகத்தில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் ஓய்வூதியம் தொடர்பான கருத்துருக்கள் வருகின்றன. ஒருவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே ஓய்வூதிய கருத்துருக்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் பரிசீலனை செய்து விரைவாக வழங்க முடியும். 40 சதவீத கருத்துருக்கள் மட்டுமே 3 மாதங்களுக்கு முன்பு வருகிறது. எனவே, ஓய்வூதியம் தொடர்பான கருத்துருக்களை காலதாமதம் இன்றி அனுப்ப வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே தணிக்கை இயக்குனர் ஜெனரல் அனிம் செரியன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காயர் (தணிக்கை-2) கே.பி.ஆனந்த், (தணிக்கை-1) டி.ஜெய்சங்கர், தணிக்கை இயக்குனர் ஜெனரல் ஆர். திருப்பதி வெங்கடசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT