Last Updated : 20 Nov, 2024 08:09 PM

2  

Published : 20 Nov 2024 08:09 PM
Last Updated : 20 Nov 2024 08:09 PM

ஆங்கிலத்தில் தமிழ்நாடு பெயரில் ‘ழ’கரம் வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய கோரி வழக்கு

மதுரை: ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் சிறப்பு ‘ழ’கரம் வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக்கோரிய மனுவை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக சிறப்பு ‘ழ’ கரம் உள்ளது. ஆனால், அரசாணைகளில் ‘STATE GOVERNMENT OF TAMILNADU’ எனக் குறிப்பிடப்படுகிறது. இது ‘தமிழ்நாடு’ என்பதை ‘டமில்நடு’ என தவறாக உச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே சிறப்பு ‘ழ’கரம் இடம் பெறும் வகையில் அரசாணைகளில் ‘THAMIZHL NAADU’ அல்லது ‘TAHMIZHL NAADU’ எனது திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021ல் வழக்கு தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனது கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, தமிழக அரசின் அரசாணை மற்றும் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில், ‘THAMIZHL NAADU’ அல்லது ‘TAHMIZHL NAADU’ எனத் திருத்தம் செய்யவும், சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டிற்கான தனி கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்து, மனுதாரரின் மனுவை விரைவாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x