Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

சித்த மருத்துவக் கல்லூரியில் மருந்து தட்டுப்பாடு!: சர்க்கரை நோயாளிகளுக்கு கசப்பான அனுபவம்

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

`இம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் சூரணம் கிடைக்கவில்லை’ என, ‘தி இந்து’ `உங்கள் குரல்’ போன் மூலம் வாசகர் ஒருவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பாக ‘தி இந்து’ செய்தியாளர் விசாரித்தபோது, சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மட்டுமின்றி, மேலும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இங்கு இல்லை என்பது தெரியவந்தது.

1,000 வெளிநோயாளிகள்

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 500 பேர் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். 100 பேர் பயிற்சி மருத்துவர்கள், 6 துறைகளை சேர்ந்த பட்டமேற்படிப்பு மாணவர்கள் 180 பேர், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி பெறுவோர் தலா 100 பேர் என்று மொத்தம் 980 பேர் இங்கு கல்வி பயில்கின்றனர்.

இக்கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை செயல்படுகிறது. உள்நோயாளிகளாக 350 பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

இருப்பு இல்லை

இவர்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகள், லேகியங்கள், சூரணங்கள் உள்ளிட்டவை இங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டால், `இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இம்மருத்துவமனையில் 130 விதமான மருந்துகள், சூரணங்கள், லேகியங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன. தற்போது வெறும் 36 மருந்துகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகிறது. அதிலும் முக்கிய நோய்களுக்கான மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதில்லை. இதனால் அவ்வப்போது தட்டுப்பாடு நிலவுவது வாடிக்கையாக உள்ளது.

நோயாளிகள் ஏமாற்றம்

சர்க்கரை நோயாளிகளுக்கு மதுமேக சூரணம், திரிபலா சூரணம் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த பல வாரங்களாக இவை நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து கேட்டால் இருப்பில் இல்லை என்று பதில் அளிக்கப்படுகிறது. நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

மருத்துவமனை வட்டாரத்தில் புதன்கிழமை விசாரித்தபோது, சர்க்கரை நோயாளிகளுக்கான சூரணங்கள் 3 மாதமாக இருப்பில் இல்லை. தற்போது வரவழைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மாத்திரைகள் இல்லை என்று தெரியவந்தது.

அக்கறையின்மை

இதுபோல் தோல் நோய்களுக் கான அருகம்பேஸ்ட், வாதநோய் களுக்கான வி.எம். ஆயில், சர்க்கரை நோயாளிகளுக்கான கேசரி லேகியம், பரங்கிப்பேட்டை சூரணம், கீழாநெல்லி சூரணம் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளுக்கும் இங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

எந்தெந்த மருந்துகள் இருப்பில் இருக்கின்றன. எவையெல்லாம் அதிகம் தேவைப்படுகிறது என்பது குறித்த தகவல்களை திரட்டி அரசுக்கு அளித்து உரிய மருந்துகளை வாங்கி இருப்பில் வைக்கவும், அவற்றை நோயாளிகளுக்கு வழங்கவும் இங்குள்ள மருத்துவர்கள் அக்கறையின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதி விளம்பரங்கள்

இம்மருத்துவ கல்லூரி சுற்றுச்சுவர்களை அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதுபோல் இஷ்டத்துக்கு விளம்பரங்களை எழுதி இருக்கின்றன. இதை தடுக்கவும், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்கவும் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x