Published : 10 Sep 2024 05:04 AM
Last Updated : 10 Sep 2024 05:04 AM
சென்னை: எண்ணூர் பகுதியில் ஏற்பட்டஎண்ணெய் கசிவு தொடர்பாக அபராதத் தொகை கணக்கிடப்பட்டு வருவதாகப் பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மணலி பகுதியிலிருந்து சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது. சுமார் 20 கிமீ தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. அப்பகுதிகளுக்கு இரை தேடி பறவைகள் வரவில்லை. மீன்பிடிப் படகுகள், வலைகள் மீதுதடிமனான பிசின் போன்ற கரியநிற பெட்ரோலியக் கழிவு படிந்துபாழானது. அங்குள்ள குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், நிலங்களில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது. அங்கு பெட்ரோலிய நாற்றமும் வீசியது. அதனால் மீனவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவையும் அமைத்தது.
இந்த பெட்ரோலிய எண்ணெய்கழிவுகள் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறியது. பல்வேறு முகமைகள் மூலமாக2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டருக்கு மேல் நீரில் கலந்த எண்ணெய் கழிவு அகற்றப்பட்டது. குப்பைக் கழிவுகள் மற்றும் மண்ணுடன் 660 டன்எண்ணெய் கழிவும் அகற்றப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவால்தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்குறித்து சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு,அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்சத்யஜித், ``எண்ணெய் கசிவை ஏற்படுத்திய நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க, சேகரிக்கப்பட்ட எண்ணெய் கழிவின் அடிப்படையில் அபராதம் மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் விவரம் விரைவில் தாக்கல் செய்யப்படும்'' என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்.24-ம்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT