Published : 02 Sep 2024 03:10 PM
Last Updated : 02 Sep 2024 03:10 PM

‘வந்தா மொத்தமா வருது, இல்லைன்னா...’ - சென்னை மாநகர பேருந்து நிலை குறித்து பயணிகள் வேதனை

மாநகர பேருந்து மொத்தமாக அணிவகுப்பதாகவும், அதை தவறவிட்டால் அடுத்த பேருந்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னையில் சுமார் 80 லட்சம் மக்கள் வாழும் நிலையில், பெரும்பாலானோர் போக்குவரத்து தேவைக்காக பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர்.

அவர்களுக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 672 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகள், 1,674 விரைவு பேருந்துகள் என 3,233 பேருந்துகளின் சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண சேவை வழங்கியதையடுத்து, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் சதவீதமும் 70-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ச்சியாக வருவதும், இல்லாவிட்டால் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் இருப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.

குறிப்பாக இது புறநகர் பகுதிகளில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் மக்கள் சற்று அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோ, சில நேரங்களில் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் கூட செல்ல நேரிடுவதாகவும் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அம்பத்தூரை சேர்ந்த வடிவேல் கூறியதாவது: வழக்கமாக பணி முடிந்து 8 மணிக்கு மேலாக அலுவலகத்தில் இருந்து புறப்படுவேன். அம்பத்தூர் எஸ்டேட் வரும் வரைக்கும் ஏராளமான பேருந்துகள் இருக்கும். ஆனால், அங்கிருந்து அம்பத்தூர் ஓ.டி. செல்வதற்கு அந்த நேரத்தில் சில பேருந்துகளே இயக்கப்படும்.

அதுவும் 9.15 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டியது தான். சில பேருந்துகள் வருகிறதா என்பதை சென்னை பஸ் செயலியிலும் பார்க்க முடிவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்காமல் மக்களின் தேவைக்கேற்ப இயக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிண்டியை சேர்ந்த தமிழினியன் கூறியதாவது: அண்மையில் கோவை செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதற்காக அடையாறில் நீண்ட நேரம் காத்திருந்தேன். ரயிலை தவறவிடக் கூடாது என்பதற்காகவேறு வழியின்றி ஆட்டோவை முன்பதிவு செய்துபுறப்பட்டேன். ஆனால், சிறிது தூரம் சென்ற நிலையில் ஆட்டோவை தாண்டி ஒரு பேருந்து சென்றது.

அடுத்து சிறிது தூரத்தில் மற்றொரு பேருந்தை பார்த்தேன். இவ்வாறு தொடர்ச்சியாக வருவதற்குபதிலாக நேரத்தை கணக்கில் கொண்டு சேவையைமாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநகர போக்குவரத்துக் கழகம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாகமேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தொடர்ச்சியாக பிற்பகல் நேரத்தில் தேவையில்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவதை பெரும்பாலும் மாநகர போக்குவரத்துக் கழகம் தவிர்த்துவிட்டது. அதேநேரம், அடுத்தடுத்துவரும் பேருந்துகளுக்கு தீர்வு காண்பது தற்போதைக்கு சாத்தியமில்லை. பேருந்து புறப்படும்நேரத்தை மட்டுமே வகுக்க முடியும்.

இடையில்ஏற்படும் நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் தானாகவே ஒரு பேருந்துக்கு பின் அடுத்த பேருந்து என தொடர்ச்சியாக சேர்ந்துவிடும். மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பிறகே, இதுதொடர்பாக மறுவரையறை பணிகளை நிர்வாகம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம் அதன் பின்னர்,மெட்ரோ ரயில்கள் இயங்கும் வழித்தடத்தில் பேருந்துகளின் தேவை குறைவதற்கான வாய்ப்புள்ளது. அப்போது, அந்த பேருந்துகளை மக்களின் தேவைக்கேற்ப புறநகர் பகுதிகள் போன்றவற்றில் இயக்க வேண்டும்.

சென்னை பஸ் செயலியில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில்,
தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிறுத்தத்தில்
பேருந்துகள் அணிவகுப்பதை காணலாம்.

இப்போது கிளாம்பாக்கத்தை அடையும் வகையிலேயே பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக பிற வழித்தடங்களில் உள்ள பேருந்துகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல்தான் இருக்கிறது. சென்னையின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு சுமார் 7ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், நம் வசம் 3,300 மட்டுமே இருக்கின்றன. அடுத்தகட்டமாக வாங்கப்படும் பேருந்துகளும், பழைய பேருந்துகளை மாற்றும் வகையிலேயே பயன்படும்.

எனவே, அதிகளவு பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும். மெட்ரோ பணிகளுக்கு பிறகு புதிய வழித்தடங்களைத் தொடங்குவது, ஏற்கெனவே இயக்கி நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் இயக்குவது போன்ற பணிகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். திருவள்ளூர் வரை மாநகர பேருந்துகள் இயங்குகின்றன. எனவே, திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஏராளமான பணிமனைகளையும் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின்எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தேவையான வழித்தடத்தில் பேருந்து சேவையை அதிகரிக்கிறோம். ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துசெல்லக் கூடாது என்பதில் மாநகர போக்குவரத்துக் கழகம் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காகவே கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்து, பின் செல்லும் பேருந்து நடத்துநர்களை உடனடியாக தொடர்பு கொண்டு அறிவுறுத்துகிறோம். இதற்காக பயிற்சியும் அளிக்கிறோம். இதனை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் பணியில் ஈடுபட்டுள்ளன. தேவையான நேரத்தில் செல்லும் வகையில் வழித்தடத்தை மாற்றும் பணிகளைமேற்கொள்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 106 வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 74 வழித்தடங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

திட்டமிட்டபடி பேருந்துகள் செல்லும்போது ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்துகளின் விவரம் சென்னை பஸ் செயலியில் இடம்பெறும். வேறு வழித்தடத்தில் உள்ள பேருந்துகளை மாற்றி இயக்கும்போது, அவை செயலியில் காண்பிக்க முடியாத சூழல் இருக்கிறது. இதற்காகவே, பேருந்துகளை மாற்று தடத்தில் இயக்க வேண்டாம் எனவும் அதே தடத்தில் உள்ள பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம்.

முழு முயற்சியாக வழித்தடத்தை சீரமைக்கும் ஏற்பாடுகளை தற்போது செய்யவில்லை. விரைவில் 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இணையவிருக்கிறது. தொடர்ந்து, மெட்ரோ பணிகள் முடிவடைந்த பிறகு, முழு வேகத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x