Last Updated : 30 Aug, 2024 09:00 PM

3  

Published : 30 Aug 2024 09:00 PM
Last Updated : 30 Aug 2024 09:00 PM

“தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு” - தமிழிசை கருத்து

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

கோவை: “ஆன்மிகம் அல்லாத அரசியல் என எதுவும் இல்லை. அண்ணாமலை வெளிநாடு செல்வதை அடுத்து, கட்சி அமைத்துள்ள நிர்வாகக்குழு ஹெச்.ராஜா தலைமையில் செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினர். மேலும், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று (ஆக.30) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு ஹெச்.ராஜா தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை வைத்து இக்குழுவும் கட்சியில் உள்ள அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்.

நான் சுமார் நான்கரை ஆண்டுகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளேன். முழு நேரமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அப்பட்டியலில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளன. அவை தங்களது விரிவாக்க பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றன. இதனை புதிய முதலீடாக கருத முடியாது.

அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது.

தமிழ் மொழிக்கு பிரதமர் அளித்துள்ள மரியாதையை போல, தமிழகத்தில் உள்ள தலைவர்கள் கூட கொடுத்ததில்லை. இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் தான் நமது உயிர், நமது வாழ்வு, அதே நேரத்தில் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாது என தமிழ் தாய் நினைப்பதில்லை.

மலையாள திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக நாங்களும் குரல் கொடுத்துள்ளோம். பெண்கள் மீதான பாலியல் தொல்லை எந்த துறையில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள விஜய் சீரடி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற அடிப்படையில் கடவுள் நம்பிக்கையோடு அவர் செயல்படுவது வரவேற்கத்தக்கது. ஆன்மிகம் அல்லாத அரசியல் என எதுவும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x