Published : 08 Aug 2024 05:20 PM
Last Updated : 08 Aug 2024 05:20 PM
சென்னை: நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை கணிப்பதில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், எம்.எஸ்.சுவாமிநாதனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 'பசியில்லாத உலகம்' என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இறுதி நாளான இன்று மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து தரவுகளுடன் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: "விண்வெளி தொழில்நுட்பம் நமது இயற்கை வளங்களை பாதுகாக்கவும், எதிர்கால தேவைக்கான வளர்ச்சியை நோக்கிய பயணத்துக்கும் உதவிகரமாக உள்ளன. நாம் விண்ணுக்கு செலுத்தும் செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கப் பெறும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, விவசாயம், வானிலை, பருவநிலை மாற்றத்தின் தாக்கம், இயற்கை வளங்கள் கண்காணிப்பு, கல்வி, சுகாதாரம், தொலைத்தொடர்பு வசதி, வழிகாட்டுதல் சேவை, பேரிடர் மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு, நகர்புற திட்டமிடல், மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு இன்றிமையாததாகும்.
இதுதவிர எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு விண்வெளியிலும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது பருவநிலை மாற்றம் உலகளவில் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அவற்றை எதிர்கொள்வதற்கான ஆய்வுகளிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் சுதந்திர தினத்தில் புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதிலுள்ள ஆய்வுக் கருவிகள் பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படங்கள் எடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு உதவும். அதேபோல், சிறிய செயற்கைக்கோளில் உபயோகிக்கும் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் மற்ற செயற்கைக்கோள்களிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்னோட்டமாக சில புதிய தொழில்நுட்பங்கள் இஒஎஸ்-08 செயற்கைக்கோளில் வைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளை கொண்டு அடுத்தகட்ட தயாரிப்புகள் மேம்படுத்தப்படும்.
மேலும், இயற்கை பேரிடரை பொறுத்தவரை புயலை கணிப்பதில் நாம் சிறந்து விளங்குகிறோம். அதேநேரம் நிலச்சரிவு, மிக கனமழை போன்ற பேரிடர்கள் கணிப்பில் இன்னும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் சௌமியா சுவாமிநாதன், அறங்காவலரும், விஞ்ஞானியுமான டி.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT