Published : 03 Aug 2024 05:03 PM
Last Updated : 03 Aug 2024 05:03 PM

“ஸ்டாலின்தான் முதல்வர் என்றாலும் ஆட்சி செய்வது பழனிசாமிதான்” - முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு

அனகாபுத்தூரில் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

அனகாபுத்தூர்: “முதல்வராக ஸ்டாலின் இருந்தாலும் ஆட்சி செய்வது பழனிசாமிதான்” என தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அனகாபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்.

பம்மல் - அனகாபுத்தூர் பகுதியில் நடைபெற்ற பாதாளச் சாக்கடை திட்டத்தால் குண்டும் குழியுமாக மாறிய சாலையைச் சீரமைக்காத தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனகாபுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனகாபுத்தூர் பகுதி செயலாளர் அனகை வேலாயுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா மற்றும் மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்சிங், கணிதா சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், "படுமோசமாக உள்ள சாலையில் மனசாட்சி உள்ள திமுகவினர் பயணித்துள்ளார்களா? குன்றத்தூரில் அமைச்சர் அன்பரசன் இருக்கிறார். அவர் இந்த சாலையில் பயணித்துள்ளாரா?" என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசுகையில் "எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இந்த பாதாள சாக்கடை திட்டத்துக்கு அறிக்கை கொடுத்தவுடன் அமைச்சர், எம்எல்ஏக்கள் கூட்டம் போட்டு பேசுகிறார்கள். முதல்வராக ஸ்டாலின் இருந்தாலும் ஆட்சி செய்வது பழனிசாமி தான்.

இந்த பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் ஆட்டோவில் இந்த சாலையில் சென்றால் போதும் உடனடியாக சுகப்பிரசவம் ஆகிவிடும். அந்த நிலைமையில் தான் சாலை உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் சரியான முறையில் பருப்பு, பாமாயில் கிடைப்பதில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா புழக்கம் தலை விரித்தாடுகிறது. அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவது சகஜம் என்கிறார் சபாநாயகர். வரலாற்றிலேயே திமுக மேயர் மீது திமுகவினரே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இப்போது தான். அந்த அளவுக்கு அவலமான ஆட்சி நடைபெறுகிறது.

தமிழக போலீஸாரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிகாரிகள் இருந்தனர். ராணுவ கட்டுப்பாட்டுடன் காவல் துறை இருந்தது. பொம்மை முதல்வர் திடீரென்று இத்தனை வருடங்கள் கடந்த பின்பு அம்மா உணவகம் சென்று அது இல்லை, இது இல்லை என்று ஞானம் வந்தது போல் இப்போது பிதற்றுகிறார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அனைத்து கட்டணங்களையும் உயர்த்தி விட்டார்கள். மக்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களே சிந்தியுங்கள். திமுக ஆட்சியை அகற்றும் வரை நாம் போராட வேண்டும்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x