Published : 30 Jul 2024 04:35 AM
Last Updated : 30 Jul 2024 04:35 AM

ரத்து செய்யப்பட்ட அந்த்யோதயா ரயிலை எழும்பூரிலிருந்து இயக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ள அந்த்யோதயா ரயிலை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும் என்றுபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெரிசல் மிகுந்த வழித்தடங்களில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், `அந்த்யோதயா' என்ற பெயரில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில், முழுவதும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், தாம்பரம் - திருநெல்வேலி இடையே அந்த்யோதயா ரயில் சேவை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன்மாதத்தில் தொடங்கப்பட்டது.

இந்த ரயில் சேவை பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உள்ள 16 பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் என்பதால், கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வசதியாக இருக்கிறது. இதன் காரணமாக, இந்த ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணி காரணமாக, இந்த ரயில் சேவையை கடந்த23-ம் தேதி முதல் ஆக.14-ம்தேதிவரை ரத்து செய்து ரயில்வேநிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான ரயில்கள் பகுதி ரத்து மட்டும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, இந்த ரயிலையும் பகுதி ரத்து செய்து வேறு ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு போதிய அளவில் ரயில்கள் இல்லாததால், பயணிகள் அவதிப்படும் நிலையில், தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட அந்த்யோதயா ரயில்எல்லா தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

இந்த ரயில்ஆக.14-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலைசெங்கல்பட்டு அல்லது எழும்பூர்ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறும்போது, ``பொறியியல் பணி காரணமாகவே இந்தரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து தற்காலிகமானது; விரைவில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும். இந்த ரயிலை மற்ற நிலையங்களிலிருந்து இயக்கஎந்தத் திட்டமும்இல்லை'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x