Published : 22 Jul 2024 12:04 PM
Last Updated : 22 Jul 2024 12:04 PM

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

கமலா ஹாரிஸ்

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார். பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold' என்ற புத்தகத்தில் தனது தாத்தா P.V. கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும், கடந்த 1991 ஆம் ஆண்டு, தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x