Published : 13 Aug 2014 10:27 AM
Last Updated : 13 Aug 2014 10:27 AM
வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக சென்னையில் ‘இடம் பெயர்ந்தோர் வள மையம்’ தொடங் கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பொது, நிதி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தோற்றுவிக்கப்படும். படைப்பணிக்கு தனது ஒரே மகன், மகளை அனுப்பும் பெற் றோருக்கு ஓராண்டுக்கு வழங்கப் படும் மானியம் ரூ.750-ல் இருந்து உயர்த்தப்பட்டு, ஒரே தடவை யாக ரூ.20 ஆயிரமும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மகன், மகளை அனுப்பும் பெற்றோருக்கான ஆண்டு மானியம் ரூ.1,000 என்பதை மாற்றி ஒரே தடவையாக ரூ.25 ஆயிரமும், வெள்ளிப்பதக்கமும் வழங்கப்படும்.
முப்படையில் நிரந்தர படைத் துறை அலுவலர்களாக பயிற்சி யில் சேரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத் துறை அலுவலர் பயிற்சியில் சேருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளில் சேரு பவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். மாலை நேர கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப் படும்.
சுயதொழில் புரியும் முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள், முன்னாள் படைவீரர்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், வட்டி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்தொகை உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 60 மாதங்களில் இருந்து 96 மாதங்களாக நீட்டிக்கப்படும்.
கைம்பெண்கள் மற்றும் போரில் 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுற்ற படை வீரர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். போரில் மரணமடைந்த படை வீரர்களின் வாரிசுதாரர்கள், கைம்பெண்கள் மற்றும் போரில் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் ஆண்டு பராமரிப்பு மானியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக சென்னையில் ‘இடம் பெயர்ந்தோர் வள மையம்’ தொடங்கப்படும். வெளிநாடுவாழ் தமிழர்கள் இறந்தால் அவர்களின் உடலைக் கொண்டு வருவதற்கும், வறிய நிலை, மருத்துவ இயலாமையில் உள்ள தமிழர்களை ஆணையர் (மறுவாழ்வு) மூலம் தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்து வருவதற்கும் ஏற்படும் செலவினத்துக்கு ரூ.1 கோடி சுழற்சி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT