Published : 02 Jul 2024 07:48 AM
Last Updated : 02 Jul 2024 07:48 AM

தொடர் மழை காரணமாக வெள்ளக்காடான கூடலூர், பந்தலூர்: வெள்ளத்தில் சிக்கிய 48 பேர் பத்திரமாக மீட்பு

கூடலூர் அருகே இருவயல் பகுதியில் மழை நீர் புகுந்த வீட்டுக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் தீயணைப்புத் துறையினர்.

பந்தலூர்: கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 48பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை நிலவரம்: பந்தலூர் 62, கூடலூர் 45, கீழ் கோத்தகிரி 31, தேவாலா 46, சேரங்கோடு 128, அவிலாஞ்சி 18, பாடந்துறை 134, ஓவேலி 39, அப்பர் பவானி 16, செருமுள்ளி 133 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பாடந்தொரை பகுதியில் பெய்த கனமழையால் ஆலவயல் சாலை, கனியம்வயல் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாடந்துறை பகுதியில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையம் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பணியாளர்கள் பால் கேன்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பந்தலூர் பகுதியில் பெய்த கனமழையால் பந்தலூர் பஜார் பகுதியில் சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு ஆறு போல காட்சியளிக்கிறது. அதனால் பந்தலூர் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேவாலா-கரியசோலை சாலையில் பில்லுக்கடை அருகே ஏற்பட்ட மண் சரிவால் அந்த சாலை துண்டிக்கப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்து வருவதால் வெள்ளஅபாய எச்சரிக்கையும் தொடர்கிறது.

இந்நிலையில், கூடலூர், பந்தலூர் தாலு்காக்களுக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: பந்தலூரில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது. 50 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் பல முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூடலூர் அருகே இருவயல் என்ற பகுதியில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளில் தங்கஇயலாத நிலை ஏற்பட்டது. கூடலூர்நிலைய அலுவலர் (பொ) சங்கர்தலைமையில் தீயணைப்புத்துறை யினர் அப்பகுதியில் சிக்கியிருந்த 46 பேர் மீட்டு, தொரப்பள்ளி ஜிடிஆர் நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும், புத்தூர் வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 2 பேரும் இங்கு கொண்டு வரப்பட்டு, மொத்தம் 48 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x