Published : 12 Jun 2024 06:36 AM
Last Updated : 12 Jun 2024 06:36 AM

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள்: காவல் துறை மீது ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி

சென்னை: அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் காவல்துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்த அனுமதி வழங்குவது என்பது குற்றவியல் நடுவரின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது. முதலில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் தெரியவராத விவரங்கள் பின்னர் தெரிய வரும்போது, அதுகுறித்து மேல் விசாரணை நடத்தலாம்.

இதன்மூலம் அப்பாவிகள் தண்டிக்கப்படுவது தவிர்க்கப்படும். உண்மை குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது. மேல் விசாரணை அறிக்கையை ஏற்பதா அல்லது ஏற்க மறுப்பதா என்பதையும், அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிப்பது அல்லது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்குவது குறித்து சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்றார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்குகளில் விடுவிக்கக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது முந்தைய ஆட்சிக்காலத்தில் காவல்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்காததால், அந்த மனுக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. அதனால் இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆட்சிமாற்றம் காரணமாக காவல் துறையினர்நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. இது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே நடக்கிறது. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.

அதன்பிறகு அரசு தலைமை வழக்கறிஞரின் வாதங்களுக்கு குற்றம்சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் பதிலளிக்க ஏதுவாக இந்த வழக்கு விசாரணையை ஜூன் 13-க்கு (நாளை) தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x