Published : 27 May 2024 07:38 PM
Last Updated : 27 May 2024 07:38 PM

“மோடியை திட்டுவதே பிரகாஷ் ராஜின் முழுநேர வேலை” - அண்ணாமலை விமர்சனம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னை: “அரசியலில் பிரகாஷ்ராஜின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை. பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அவரின் அரசியல் அனுபவம்” என அண்ணாமலை சாடியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு நடிகராக அவர் மீது மரியாதை உண்டு. அதை தாண்டி அரசியலில் அவரின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை. பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அவரின் அரசியல் அனுபவம். மோடியை திட்டுவதை மட்டுமே தனது முழுநேர வேலையாக கொண்டுள்ளார் அவர். எனவே, பிரகாஷ் ராஜ் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.

கடவுள் அனுப்பியதாக பிரதமர் மோடி பேசியதை திரித்து இங்கே சிலர் மேடையில் பேசுகிறார்கள். பிரதமர் மோடி இந்தியில் பேசுவதை புரியாமல் இங்கு பேசினால் அதற்கு என்ன பதில் சொல்வது? திருமாவளவன் ஒரு எம்.பி. பொறுப்பாக பேச வேண்டிய நபர் அவர். அண்ணன் திருமாவளவனுக்கு எனது ஒரு வேண்டுகோள். பேசும்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை உணர்ந்து பேச வேண்டும். மோடி எதிர்ப்பு என்பதை பல எல்லைக்கு கொண்டுச் சென்றுள்ளதை மோடியே கூறி வருகிறார்.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாற்று கட்சியினருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஸ்டாலின் மாதிரி நாங்கள் இரவு இரண்டு மணிக்கு யாரையும் கைது செய்ய மாட்டோம். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமையை பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது” என்றார்.

என்ன பேசினார் பிரகாஷ் ராஜ்? - முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா - 2024 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில் , நடப்பாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ், “கடந்த 10 ஆண்டுகளாக தான் இந்த மன்னரை (பிரதமர் மோடி) எதிர்த்து கொண்டிருக்கிறேன். இனிமேல் அவரை மன்னர் என்றும் கூற முடியாது. அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே.

நாட்டுக்கு அவரால் எதாவது துன்பம் ஏற்பட்டால் அவரை திட்டவும் முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

மக்களின் பரிசத்தை உணராத ஒருவர், மனதை அறியாத ஒருவருக்கு மக்களின் பசி புரியாது. எனவே தன்னை தெய்வமகனாக சொல்லி கொள்பவர் தெய்வமகன் அல்ல. டெஸ்ட் டியூப் பேபி தான். மன்னரை பார்த்து பயப்படுபவன் நான் இல்லை. எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நான் எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x