Published : 15 Aug 2014 09:00 AM
Last Updated : 15 Aug 2014 09:00 AM

புறநகர் ரயிலில் மாணவர்கள் ரகளை: உங்கள் குரலில் பயணிகள் புகார் க

சென்னை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் செங்கல்பட்டிலிருந்து மாலை 4.30 மற்றும் அதற்குப் பிறகு சென்னைக்கு வரும் ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் சிலர் மற்ற பயணிகளுக்கு இடையூறாக ரகளை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக செல்வி என்னும் பள்ளி ஆசிரியை ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறும்போது, “நான் சிங்கபெருமாள் கோயிலிலுள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். பள்ளிக்கு தினமும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயிலில் சென்று வருகிறேன். செங்கல்பட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரையை நோக்கி வரும் ரயில்களில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஏறுவார்கள். அவர்கள் ரயிலுக்குள் விசில் அடிப்பது, நடனமாடுவது, பக்கத்து பெட்டியின் கதவுகளை தட்டுவது, பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதை யாராவது தட்டிக்கேட்டால் அவர்களையும் தரக்குறைவாக பேசுகின்றனர். இந்த ரயிலில் ரயில்வே போலீஸார் யாரும் காவலுக்கு வருவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்த மாணவர்கள் மற்ற பயணிகளுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்” என்றார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, “சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில்களில் போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட ரயில்களில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன. மேலும் பயணிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் 9962502536, 9962500500 ஆகிய எண்களில் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரையும், 044-25353999, 9003161710 ஆகிய எண்களின் மூலம் மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினரையும் தொடர்பு கொள்ளலாம். இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x