Published : 25 Dec 2023 04:00 AM
Last Updated : 25 Dec 2023 04:00 AM

கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதலாக முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

படம்: ஜெ.மனோகரன்

கோவை / பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு தொழில் நிமித்தமாக வந்து செல்வோர், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் வசதிக்காக கடந்த 2018-ம் ஆண்டு கோவை - பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது.

அதிகாலை முதல் இரவு வரை மொத்தம் 4 முறை சென்று வந்த ரயில்கள், கரோனாவுக்கு பிறகு இரண்டு முறையாக குறைக்கப்பட்டன. இதில், அதிகாலை, இரவு நேரத்தில் பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்பட்ட ரயில்களை நிறுத்தி விட்டனர். பயணிகள் நலன் கருதி இந்த ரயில்கள் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொள்ளாச்சி ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதலாக முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவையை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் எம்.பி. பி.ஆர்.நடராஜன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரே டிக்கெட் எடுத்தால் போதும்: இது தொடர்பாக ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கூறியதாவது: கோவையில் இருந்து காலை 05.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பொள்ளாச்சிக்கு 06.25 மணிக்கு சென்றடைகிறது. இந்நிலையில், பாலக்காடு-திருச்செந்தூர் இடையிலான ரயில், பொள்ளாச்சியில் இருந்து, காலை 07.10 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் பழனிக்கு காலை 08.07 மணிக்கும், மதுரைக்கு காலை 10.20 மணிக்கும், திருநெல்வேலிக்கு மதியம் 01.25 மணிக்கும்,

திருச்செந்தூருக்கு மாலை 03.15 மணிக்கும் சென்றடைகிறது. இந்த ரயிலுக்கு, கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், இணைப்பு ரயிலாக இருக்கும். இதன் மூலம் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு பகுதி மக்கள், பொள்ளாச்சியில் இருந்து காலை திருச்செந்தூர் செல்லும் ரயிலை பிடிக்க முடியும். இதன் மூலம், கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரே டிக்கெட் எடுத்து பயணிக்கலாம்.

மறு மார்க்கத்தில், பொள்ளாச்சியில் இருந்து இரவு 08.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், கோவைக்கு இரவு 10.15 மணிக்கு வந்தடைகிறது. இந்நிலையில், திருச்செந்துர்-பாலக்காடு இடையிலான ரயில், திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 07.58 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயிலுக்கும் இணைப்பு ரயிலாக பொள்ளாச்சி-கோவை இடையிலான சிறப்பு ரயில் இருக்கும்.

திருச்செந்தூரில் இருந்து கோவைக்கு ஒரே டிக்கெட் பெற்று பயணிக்க முடியும். இதன் மூலம் பிரசித்தி பெற்ற ஆன்மீக இடங்களான பழனி, மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ரயில் சேவை இருக்கும். மேலும், பொள்ளாச்சி, கிணத்துக் கடவு மக்கள் கோவையிலிருந்து சென்னைக்கு இரவு கிளம்பும் சேரன், நீலகிரி உள்ளிட்ட ரயில்களை பிடிக்கவும் பொள்ளாச்சி-கோவை இடையிலான ரயில் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x