Published : 22 Dec 2023 05:31 AM
Last Updated : 22 Dec 2023 05:31 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு

திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் பகுதியில் மழையால் பாதிக் கப்பட்டு இடிந்த வீடு மற்றும் அப்பகுதி சேதங்களை மத்திய ஆய்வுக்குழுவினர் பார்வையிட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய ஆய்வுக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழுவினர், வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இக்குழுவினர் நேற்று காலை, நெல்லைமாவட்டத்தில் ஆய்வை தொடங்கினர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தலைமைப் பொறியாளர் எஸ்.விஜயகுமார், ஜல்சக்தி அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, நிதித்துறை துணை இயக்குநர் ரங்கநாத் ஆடம், மத்திய வேளாண் இயக்குநர் கே.பொன்னுசாமி, மின்சாரத் துறை துணை இயக்குநர் ராஜேஷ் திவாரி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே.எம்.பாலாஜி மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரா.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு வீடியோ காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, வெள்ளம் பாதித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மழையில் நனைந்த கோப்புகள் மற்றும்தளவாடப் பொருட்களை பார்வையிட்டனர். தாமிரபரணி ஆறு, அதன் நீர்வரத்து, வெள்ளம் சூழ்ந்த திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், டவுண் காட்சி மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் பாதிப்புகளைக் கேட்டறிந்தனர்.

பின்னர், திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் மத்திய குழுவினர் இரு பிரிவாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x