Published : 21 Dec 2023 12:37 PM
Last Updated : 21 Dec 2023 12:37 PM

“இண்டியா கூட்டணி புகைய ஆரம்பித்துவிட்டது; எப்போது நெருப்பு வரும் எனத் தெரியவில்லை” - இபிஎஸ்

இபிஎஸ்

கிருஷ்ணகிரி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடக்குமா நடக்காதா? என்பதே சந்தேகமாக உள்ளது; குழப்பத்தில்தான் இண்டியா கூட்டணியே இருக்கிறது. இண்டியா கூட்டணி புகைய ஆரம்பித்துவிட்டது; எப்போது நெருப்பு வரும் என்று தெரியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "சென்னை தமிழகத்தின் தலைநகரம். இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் அதிக கன மழை பொழியும். 40 முதல் 50 கிலோமீட்டர் வரை காற்று வேகமாக வீசும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது. அரசுக்கும் அந்த செய்தி தெரியும். தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக இந்த செய்தி ஒளிபரப்பு வந்தது. ஆனால் அரசாங்கம் இந்த செய்தியை பொருட்படுத்தவில்லை. அரசாங்கம் இந்த செய்தியை அலட்சியப்படுத்தியதால்தான் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்து இருக்கின்றனர்.

பருவமழை காலங்களில் ஒரு மாதம் முன்பே அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதிமுக ஆட்சியிலேயே அடையாறு ஆறுகள் தூர்வாரப்பட்டன. பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த பாதிப்பை குறைத்திருக்கலாம். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது. இது அரசுக்கும் தெரியும். சென்னையில் நடந்த விஷயத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, அங்கேயாவது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். திமுக அரசை பொருத்தவரை கமிஷனில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். மக்களை பற்றி கவலையே படுவதுகிடையாது. மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. இதெல்லாம் மக்கள் சொன்ன கருத்துதான். எதிர்க்கட்சி வேண்டுமென்று திட்டமிட்டு குறை சொல்வதாக எண்ணக் கூடாது. மக்கள் கூறிய கருத்தை ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

திமுக அரசு வெள்ள பாதிப்பு விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது, அந்த தவறை மறைக்க இந்திய வானிலைமீது பழி சுமத்துகிறது. தன்னுடைய பணியை தட்டிக் கழிக்கிறது இந்த அரசாங்கம். தூத்துக்குடிக்கு நான் நேரில் சென்று இருந்தபோது அங்கே எந்த ஒரு அமைச்சரும் கிடையாது. ஆனால் அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பணிகளை மேற்கொள்வதாக செய்திகளும் வருகின்றன. இந்த அரசு செயலற்ற அரசாக காட்சியளிக்கிறது. மக்களின் துன்பங்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை, இது வேதனை அளிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடக்குமா நடக்காதா? என்பதே சந்தேகமாக உள்ளது; குழப்பத்தில்தான் இண்டியா கூட்டணியே இருக்கிறது. இண்டியா கூட்டணி புகைய ஆரம்பித்துவிட்டது; எப்போது நெருப்பு வரும் என்று தெரியவில்லை. 26 கட்சிகள் ஒன்றாக இணைந்து இண்டியா கூட்டணியை ஆரம்பித்ததாக இண்டியா கூட்டணி தெரிவிக்கிறது. வெவ்வேறு கருத்துடைய, வெவ்வேறு கொள்கை உடைய கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது நீடிக்குமா என்பது கேள்விக்குறி தான்” என்றார்.

அமைச்சர்களின் ஊழல் விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், “ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் என்றால், அது இந்தியாவிலேயே திமுக அரசுதான். அனைத்து இடங்களிலும் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன். இதுதான் அவர்களின் தாரக மந்திரம். திமுகவில் தற்போது இருவர் சென்றிருக்கிறார்கள். இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு இரண்டரை ஆண்டு காலம் ஊழல் செய்ததுதான் அவர்கள் சாதனை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x